![]() |
முன்னுரை:
வணக்கம், நான் "Rishokan" இந்த கட்டுரையின் தொடக்கத்தில் நான் உங்களிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி, விதியின் மீது நம்பிக்கை உள்ளதா? நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு கேலி கிண்டலாக தெரியலாம், அதை நான் விரும்பவில்லை ஏனென்றால் இது வெறும் கட்டுரையல்ல, கடந்த 28 வருடமாக நான் கடந்து வந்த வாழ்க்கைப் பயணம். மற்றும் இனி நான் கடந்து செல்ல போகும் போகும் பாதையின் முன்னோட்டம். அதை யாரும் கேலி செய்வதை நான் விரும்பவில்லை அதனால் தான் ஒரு உவமை கதையை, இன்னும் தெளிவாக சொல்லப் போனால் ஒரு உண்மை சம்பவத்தை கூறி விதியின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் குறைந்தபட்ச நம்பிக்கையாது கொடுத்து என் வாழ்க்கை ஆரம்பப் பயணத்தின் முதல் அடியிலிருந்து கூட்டி செல்ல விரும்புகிறேன்.
1989 - 1990ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள Shinkansen புல்லட் ரயில் மணிக்கு 274 கிலோமீட்டர் வேகத்தில் செயல்பட்டு வந்தது,. ஆனால் இந்த ரயில் எந்த அளவுக்கு வேகமாக செல்கிறதோ அதே அளவுக்கு சத்தத்தையும் கிட்டத்தட்ட 400 மீட்டர் தூரத்தில் இருக்கும் மக்களின் காதுகளுக்கு தொல்லையாகவும் இருந்தது. குறிப்பாக இந்த ரயில் குகை பாதையின் வழியாக செல்லும்போது நிலத்தையே நடுங்க வைக்கும் அளவிற்கான அலை அதிர்வுகள் தூரம், தூரம் வரை இருக்கும் கிராம மக்கள் கேட்க மற்றும் உணரும் அளவிற்கு தொல்லையாகவும் இருந்தது. இதை சரி செய்வதற்காக எவ்வளவோ பொறியாளர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள், ஆனால் பொறியியல் துறைக்கு சம்பந்தமே இல்லாத துறை தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு தேடித் தந்தது.
அது என்னவென்றால் Shinkansen புல்லட் ரயிலின் சத்தத்தின் பிரச்சனைக்கு தீர்வு தேடிக்கொண்டிருந்த பொறியாளர்கள் மத்தியில் வனவிலங்கு துறையில் பறவைகளை ஆராய்வதை பொழுது பொழுதுபோக்காக கொண்டிருந்த ஒரு பொறியாளரும் இருந்தார், அவரின் பெயர் Eiji Nakatsu (Head Engineer). இந்தப் பிரச்சனைக்கு பொறியியல் துறைக்கு சம்பந்தப்பட்ட எந்த ஒரு ஆய்வுகளும், புத்தகங்களும் கொடுக்காத பதிலை, பொறியியல் துறைக்கு சம்பந்தமில்லாத வனவிலங்கு பறவை ஆய்வாளரின் அனுபவம் கொடுத்தது. Eiji Nakatsu தனது பறவைகளை ஆராயும் அனுபவத்திலிருந்து மூன்று விஷயங்களை Shinkansen புல்லட் ரயிலில் மாற்றி அமைத்தார்.
முதலாவதாக இந்த ரயிலின் Pantographs அமைப்பை ஆந்தையின் இறக்கையை போல் உருவாக்கினார். ஏனென்றால் ஆந்தை என்னதான் எவ்வளவுதான் வேகமாக பறந்து சென்றாலும் அதன் சிறகின் படபடப்பு சத்தம் யாருக்கும் கேட்காது. அதேபோன்ற அமைப்பை Pantographs கொடுத்தாள் மின் வயிறுகளுடன் உருவாகும் உராய்வு சத்தத்தை குறைக்க முடியும் என்று அவர் நம்பினார். மற்றும் அந்த Pantographs-ன் shaft பென்குயினின் உடல் எப்படி காற்றை கிழித்து வலிக்கி முன்னேறும் வகையில் இருக்கிறதோ அதேபோன்று வடிவமைத்தார் இதனால் காற்றினால் உருவாகும் உராய்வை கூட கிழித்து முன்னேறும் வகையில் Pantographs மாறியது. மற்றும் குகைகளில் ரயில் செல்லும் போது உருவாகும் Sonic Boom சத்தத்தை தவிர்க்க ரயிலின் முன் பகுதியை மீன்கொத்தி பறவையின் மூக்கை போன்று மறு உருவாக்கம் செய்தார். ஏனென்றால் மீன்கொத்தி பறவை மீனைப் பிடிப்பதற்காக தண்ணீருக்குள் அதிர்வின்றி நுழைந்து உள்ளே சென்று மீனை பிடிக்கும். அதே போன்று ரயிலின் முன் பகுதி காற்றைக் கிழித்து சுமுகமாக செல்ல வேண்டும் என்று எண்ணி உருவாக்கினார்.
Eiji Nakatsu நினைத்தது போலவே இந்த மாறுதலுக்குப் பிறகு Shinkansen புல்லட் ரயில் முழுமையாக சத்தம் இன்றி பயணம் செய்தது, அதுவும் யாரும் எதிர்பாராத வகையில் முன்ன இருந்த வேகத்தை விட பத்து சதவீதம் அதீத வேகத்திலும் முன் இருந்ததை விட 15 சதவீதம் குறைவான மின்சாரம் மட்டுமே ரயில் எடுத்துக் கொண்டது. இது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த உண்மை சம்பவம்.
நான் இந்த கதையை எதற்காக கூறுகிறேன் என்றால் "உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையவை" ஒரு பட்டாம்பூச்சி சிறகு படபடப்பு அதிர்வுக்கும் ஒரு பூகம்பத்தின் அதிர்வுக்கும் சம்பந்தம் இருப்பதாக Chaos Theory சொல்லுகிறது. அதை தான் நான் புரியும் வகையில் விதி என கூறுகிறேன். அதாவது Shinkansen புல்லட் ரயிலின் பிரச்சனைக்கு தீர்வு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்தப் பொறியாளர்களின் தலைவராக Eiji Nakatsu இருக்க வேண்டும் என்பதும், அவரின் தனிப்பட்ட பொழுதுபோக்கே பிற்காலத்தில் Shinkansen புல்லட் ரயில் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்பதே விதி.
ஆகையால் என்னுடைய வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையில் எனக்கு கிடைத்த அனுபவம் யாவும் விதி எனக்காக எழுதிய பயணத்திற்கு கொடுத்த பயிற்சி என நம்புகிறேன். இந்த பயிற்சி அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கும் ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு விதி நம்மை கொண்டு சேர்க்கப் போகிறது என்பது தெரியாமல் கடந்து செல்வார்கள், ஆனால் எதிர்பாராத வகையில் எனது வாழ்க்கையின் பயணம் எங்கு கொண்டு போய் சேர்க்கப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அதைதான் இந்த கட்டுரை மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
இசையுடன் காரணம் தெரியாத வெறுப்பு:
இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் போது நான் எவ்வளவு பெரிய இசை மேதையாக இருப்பேன் என்பது எனக்கு தெரியாது, ஆனால் எனது ஆரம்ப கால சிறு வயதில் எனக்கு பாடல்கள் கேட்பது துளியும் பிடிக்காது. இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட்டில் ஆதிக்கத்தினால் அயல்நாட்டு பாடல்களை மற்றும் உலகத்தின் மறு முனையில் உள்ள தன்னிச்சை இசை கலைஞர்களின் ஆல்பம் பாடல்களையும் மிக சுலபமாக கேட்க முடியும். ஆனால் எனது மழலை பருவ காலகட்டத்தில் சினிமாவை தவிர வேறு எதன் வாயிலாகவும் பாடல்களை கேட்பதற்கான முகாந்திரம் கிடையாது. ஆனால் அந்த சினிமாவிலும் கூட நான் பாடல்களை கேட்க விரும்பாத இசை வெறுப்பாளனாக இருந்தேன்.
தமிழ் சினிமாவில் ஒரு கேளிக்கையான பேச்சு என்னை போன்ற நபர்களுக்கு உண்டு, அது என்னவென்றால் "சினிமாவில் ஹீரோ ஹீரோயினி டூயட் பாட ஆரம்பித்து விட்டால், பார்வையாளர்கள் தம் அடிக்க வெளியே சென்று விடுவார்கள்"
ஆனால் எனது கஷ்ட காலம் எனக்கு தம் அடிக்கும் வயதும், கிடையாது. ஆகையால் எவ்வளவு வெறுப்போடு அந்தப் பாடல்களை கேட்டு இருப்பேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள், இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதே பாடலை தற்போது நான் கேட்கும் போது மெய்மறந்து, வரிகளில் மூழ்கி, இசையில் மிதந்து பறந்து போகிறேன். அப்படி இருக்கையில் ஏன் எனது சிறுவயதில் மட்டும் பாடல்கள் கேட்பதை வெறுத்தேன் என்பது புரியாத புதிராகவே ஒரு சமயம் வரை என் மனதில் கேள்வியாக இருந்தது.
இதில் ஏதேனும் விதியின் பின்னணி இருக்கிறதா? ஆம் கண்டிப்பாக, தற்போது நான் துறையின் உள் வந்த பிறகுதான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. பெரும்பாலான இசை குடும்பத்தினர் அல்லது இசை குரு தங்களது குழந்தைகளுக்கு சினிமா பாடல்கள் கேட்பதில் இருந்து ஒதுக்கி வைப்பார்களாம். ஏனென்றால் இந்த வயதில் அவர்கள் கேட்கும் இசை அவர்களது ரசனையாக மாறிவிடும். அதாவது தனிப்பட்ட இசை விருப்பமாக மாறலாம். அது ஒன்றும் தவறு கிடையாது ஆனால் எல்லா பாடல்களும் குழந்தைகளுக்கு தனிப்பட்ட ரசனையாக மாற உகுந்தது கிடையாது. ஒரு சில இசை குரு அவர்கள் எந்த மாதிரியான இசை வகையை குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறார்களோ அதற்கு சம்பந்தப்பட்ட பாடல்களை மட்டுமே கேட்க அனுமதிப்பார்களாம். இதன் மூலம் சரியான இசை தேர்வு குழந்தைகளின் ரசனையாக மாறும்.
ஒரு இசை குடும்பத்தின் பின்னணியிலையோ அல்லது ஒரு குருவிடம் சென்று இசையை பயிற்று கொள்ளும் அளவிற்கு எனது பெற்றோர்களின் நிலைமை கிடையாது. அதனால்தான் விதி எனக்கு குருவாக மாறி இந்த வயதில் நீ எந்த பாடல்களையும் கேட்கக் கூடாது என எனது இசை விருப்பத்தை பாதுகாக்க தற்காலிகமாக பாடல்களை கேட்பதை வெறுக்க வைத்திருக்கிறது என நான் நம்புகிறேன்.
இசையுடன் முதல் சந்திப்பு:
எனக்கு ஒரு 12, 13 வயது இருக்கும் போது எனது வீட்டில் ஆட்டுக்குட்டி வாங்கினார்கள். பெருமலவே ஆட்டுப்பண்ணை போன்று கிடையாது பொழுதுபோக்கிற்கு ஒரு செல்லப்பிராணியாக இரண்டு ஆடுகளை வாங்கி வீட்டில் வளர்த்தோம். எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது எங்கள் வீட்டில் இருந்து ஒரு அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தோட்டம் இருக்கிறது அந்தத் தோட்டத்தில் கலைச்செடிகள் மட்டுமே வளர்ந்து கொண்டிருக்கும் சிறு குண்டுகள் உண்டு அந்த குண்டில் நாங்கள் வளர்க்கும் இரண்டு ஆடுகளையும் கொண்டு சென்று ஓரிரு மணி நேரம் மேய்ப்பது வழக்கமாக இருந்தது. சனி, ஞாயிறு எனக்கு பள்ளி விடுமுறை என்பதால் என் அம்மா என்னை ஆடுகளைக் கொண்டு சென்று மேய்த்து விட்டு வர சொல்வார்கள். அந்த சமயத்தில் எனது அம்மாவிடம் ஒரு பட்டன் செல் இருந்தது, இன்றைய காலகட்டம் மாதிரி அந்த காலகட்டத்தில் இன்டர்நெட் பயன்பாட்டில் இல்லை ஆனால் சிறு சிறு வீடியோ கேம்ஸ் இந்த மாதிரியான அனைத்து போன்களிலும் இருக்கும். அந்த வகையில் எனது அம்மாவின் செல்போனில் Flappy Bird வீடியோ கேம் இருந்தது. ஆடுகளுக்கு குண்டுகளில் மேய்ந்து கொண்டிருக்கும் போது நான் ஒரு மரத்தின் நிழல் அடியில் சும்மாதான் அமர்ந்திருப்பேன். பொழுதுபோக்கிற்கு அந்த கேமை விளையாடுவது வழக்கமாக இருந்தது.
ஒரு நாள் விளையாண்டு விளையாண்டு சலித்து போய் என் அம்மாவின் ஃபோனில் உள்ள செட்டிங், ரிங்டோன், கம்பெனி மெசேஜ்,... என என்ன செய்வது என்று தெரியாமல் நோண்டிக்கொண்டிருந்தேன். அப்படி தான் எதிர்பாராத வகையில் Fm ரேடியோ ON செய்தேன். இதற்கு முன்னதும் நான் Fm ஆன் செய்திருக்கேன், ஆனால் அப்போதெல்லாம் இரைச்சல் மட்டுமே வரும், நாம்தான் ஸ்டேஷன் Set செய்ய வேண்டும் என்பது எனக்கு அப்ப தெரியாது. எதிர்பாராத வகையில் அன்று தோட்டத்தில் Fm ஆன் செய்த உடனே பாடல் கேட்டது. என்ன பாடல் முதல் முறையாக நான் கேட்டேன் என்பது எனக்கு ஞாபகம் இல்லை ஏனென்றால் அலுத்து போய் இருக்கும் எனது மனதிற்கு நடப்பது என்னவென்று, கேட்பது என்னவென்று சுயநினைவேயில்லை. ஏதோ ஒன்று என்ற எண்ணத்திலேயே சிறிது நேரம் FM-இல் இருந்து வந்த பாடலைக் கேட்டுக் கொண்டே எனது ஆடுகள் மேய்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்து எப்போதெல்லாம் ஆடுகளை மேய்க்க போகிறேனோ அப்போதெல்லாம் Fm கேட்பது எனது பழக்கமானது. ஆனால் நாளடைவில் எஃப் எம் இல் கேட்கும் பாடல்களை மெமரி கார்டில் ரெக்கார்டும் செய்ய முடியும் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். ஆனால் அந்த ரெக்கார்ட் பாடலை மட்டும் ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்பதற்காக Fm-ல் பேசிக் கொண்டிருக்கும் Rj பேசி முடித்த உடனே ரெக்கார்ட் பட்டனை சரியான நேரத்தில் அழுத்துவது என்பது எனக்கு விளையாட்டாக மாறியது, அதே சமயம் பாடல் முடியும்போது ரெக்கார்ட் Off செய்ய வேண்டும் என்பதும் சுவாரஸ்யமாக இருந்தது.
இந்த சம்பவம் இசையின் மீதான எனது ரசனையை உருவாக்கவில்லை என்றாலும் ஒரு பாடலை முழுமையாக கேட்டு முடிக்கும் அளவிற்கு பொறுமையை தந்தது.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது டிவியின் சன் டைரக்ட் சப்ஸ்கிரிப்ஷனை கட்டாமல் எனது பெற்றோர்கள் நிறுத்தி விட்டார்கள். இந்த நிகழ்விற்கு சில மாதம் முன்னதாக யாரோ மெக்கானிக் அப்பாவின் ஆபீஸ் காரை சரியாக ஒக்கிடவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை என அந்த மெக்கானிக்கின் செட்டில் வாகனத்தில் பொருத்துவதற்காக வைத்திருந்த இரண்டு ஸ்பீக்கர் மற்றும் ஒரு சின்ன எப்எம் பாக்ஸை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார். என்னதான் பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கு மணிக்கணக்காக நான் படித்தாலும், டிவி பார்க்கும் அளவிற்கு நிறைய நேரம் மிச்சமும் இருந்தாலும் வீட்டில் டிவிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகையால் மிச்சம் இருக்கும் நேரத்தில் அப்பா கொண்டு வந்த Fm பாக்ஸில் பாடல்கள் கேட்பதே பொழுதுபோக்காக மாறியது என்று கூறுவதை விட பொழுதாகவே மாறியது என கூறலாம், அந்த அளவிற்கு தொடர்ந்து Fm வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும். நானும் பாடல்களை கேட்பதோடு மட்டுமின்றி நாள்போக்கில் அதில் ஒரு சில பாடல்களை ரசிக்கவும் ஆரம்பித்தேன், நான் ரசித்த பாடல் மீண்டும் எப்போது போடுவார்கள் என Fm Box பக்கத்திலேயே காத்திருந்தேன். இப்படிதான் எனக்கு இசை மீதான வெறுப்பை மாற்றி ரசிக்கும் வகையில் ஆளாக்கியது.
இதில் ஏதேனும் விதியின் பின்னணி இருக்கிறதா? எவ்வளவோ முறை அம்மாவின் செல்போனில் Fm App Open செய்தபோது கேட்ட இரைச்சல் சத்தம், அன்று அந்தத் தோட்டத்தில் தனிமையில் பொழுதை போக்க வேறு வழி இல்லாமல் வெறுத்து சலித்து போய் உட்கார்ந்து இருந்தபோது மட்டும் ஏன் பாடல் கேட்டது? சாதாரண ரெக்கார்ட் பட்டனை அழுத்தி விளையாடும் போக்கில் ஒரு முழுப்பாடலையும் கேட்கும் அளவிற்கு பொறுமை எங்கிருந்து வந்தது? டிவியின் சப்ஸ்கிரிப்ஷனை நிறுத்துவதற்கு ஒரு சில மாதம் முன்னதாக எப்படி Fm பாக்ஸ் எனது வீடு தேடி வந்தது? டிவி பார்ப்பதை கண்டித்த எனது பெற்றோர்கள் ஏன் Fm கேட்பதை மட்டும் தடுக்கவில்லை? பாடல்களையே கேட்க விரும்பாத என்னை எனக்குப் பிடித்த பாடல்களை எப்ப போடுவார்கள் என எஃப்எம் அருகிலேயே காத்திருக்கும் வகையில் ஆளாக்கியது எப்படி?
கண்டிப்பாக இதற்கெல்லாம் காரணம் வீதி என நான் நம்புகிறேன்.
இசையுடன் கைகோர்த்த நாட்கள்:
பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடுமுறையில் என் அப்பாவிடம் CSC computer course விளம்பரங்களை பார்த்துவிட்டு என்னையையும் CSC படிக்க வையுங்கள் எனக் கேட்டேன். உண்மையில் computer course-ல் ஆர்வம் வந்ததற்கு எந்த ஒரு காரணமும் என்னிடம் கிடையாது. அந்த ஒரு சமயத்தில் நான் பார்த்த படங்களிலும், விளம்பரங்களிலும் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் நபர்கள் ஸ்டைலாக தெரிந்தார்கள். அந்த ஒரு ஈர்ப்பு தான் CSC படிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு காரணம். ஆனால் CSC-ல் என்ன course படிப்பது என்று எந்த ஒரு விபரமும் எனக்குத் தெரியாது. என் அப்பா ஒன்னும் படித்த நபர் கிடையாது, அவருக்கும் இதை பற்றி எந்த ஒரு விவரமும் தெரியாது. அதனால் என் அப்பாவின் ஆபிசர் இன்ஜினியரிங் படித்த முன்னாள் ஐடி ஊழியராக வேலை பார்த்த நபர். ஆகையால் அவரிடம் என் அப்பா விவரம் கேட்டபோது அவர் DTP ( Desktop Publishing ) படிக்க வையுங்கள் எதிர்காலத்தில் ஆபீஸ் வேலையின் போது இந்த படிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனக் கூறியிருந்திருக்கிறார். ஆனால் என் அப்பா தெளிவாக course பெயர் தெரிந்து கொள்ளாமல் DTP பதிலாக DVP ( Diploma in Video Production ) course-ல் சேர்த்து விட்டார். ஓரிரு வாரங்களுக்கு பிறகு நான் CSC சென்டரில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சாஃப்ட்வேர் வேண்டும் என என் அப்பாவின் ஆபிசரிடம் கேட்கும்போது நான் DTP-க்கு சம்பந்தமில்லாத சாஃப்ட்வேரை ஏன் கேட்கிறேன் என அவர் தெளிவாக என்னிடம் CSC-ல் என்ன course படிக்கிறாய் என கேட்டார்? நான் DVP என்று சொன்ன பிறகுதான் புரிய வந்தது ஆபிசர் பரிந்துரைத்தது DTP நான் படித்துக் கொண்டிருப்பது DVP ஒரு வார்த்தை T மற்றும் V -ல் குழம்பி வேறு ஒரு course-ல் அப்பா சேர்த்து விட்டு விட்டார் என்று. Officer-ம் என் அப்பாவை ஆறுதல் படுத்த இதுவும் ஒரு நல்ல course தான் என்று கூறினார். எனக்கு அதைப் பற்றின எந்த ஒரு கவலையும் கிடையாது ஏனென்றால் எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் விளையாட்டாக கம்ப்யூட்டரில் ஏதாவது படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் CSC -ல் சேர்ந்தேன். அதனால் தொடர்ந்து அந்த course-க்கு சென்று மூன்று மாதத்தில் முடித்து விட்டேன். அதன் பிறகு நான் இப்படி ஒரு course படித்தேன் என்பதையே மறந்து விட்டேன். நானே எதிர்பாராத வகையில் 4, 5 வருடங்கள் கழித்து DVP ஒரு புதிய பயணத்திற்கு பாதையாகியது. தவறுதலாக நான் எடுத்து படித்த DVP சரிதான் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் வழி வகுத்தது. அது என்னவென்று நான் சொல்வதற்கு முன் இவை இரண்டுக்கும் இடையில் நான் கடந்து வந்த அந்த சில வருடங்களில் என்ன நடந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நான் பதினோராம் வகுப்பில் Maths group எடுத்தேன், அது என் பத்தாம் வகுப்பின் பொதுத் தேர்வு மதிப்பெண்ணால் கிடைத்ததல்ல. நான் பத்தாம் வகுப்பு மதுரையில் முடித்துவிட்டு திருநெல்வேலியில் பதினோராம் வகுப்பு சேர்ந்தேன். அந்தப் பள்ளியில் அங்கேயே பத்தாம் வகுப்பு பயின்று பதினோராம் வகுப்பு வரும் எந்த ஒரு மாணவர்களும் Maths group எடுக்க மறுத்து விட்டார்கள். மிக சொற்பமான மாணவர்களே Maths group சேர்ந்தன. அதனால் அந்த சமயத்தில் யாரெல்லாம் புதிதாக வருகிறார்களோ எல்லாரையும் பேசி சமாளித்து Maths group-ல் ஆசிரியர்கள் சேர்த்தார்கள் என்று கூறுவதை விட திணித்தார்கள் என்பதே உண்மை. எனக்கு இயல்பாகவே கணிதம் வராது. அது என் பெற்றோர்களுக்கும் தெரியும். ஆனால் படிப்பறிவு இல்லாத எனது பெற்றோர்கள் Maths group தான் ஃபர்ஸ்ட் குரூப் என்ற ஆசிரியர்களின் வார்த்தைகளால் என்னை சேர்த்து விட்டார்கள். பதினொன்றாம் வகுப்பு வேண்டா வெறுப்பாக தான் படித்தேன். அப்போதே எனக்கு தெரிந்து விட்டது பன்னிரண்டாம் வகுப்பின் பொதுத் தேர்வில் நான் தேர்ச்சி பெற மாட்டேன் என்று. அந்த அளவிற்கு முட்டாள்தனமான கணக்குகள் மட்டுமே நிறைந்து இருக்கும் புத்தகங்கள் என்னை பயமுறுத்தியது. 12 ஆம் வகுப்பில் நான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதனால் வீட்டில் சண்டையிட்டு நான் பள்ளிக்கூடத்திற்கு போக மாட்டேன் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஆனால் வீட்டில் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. இதற்கிடையில் எலக்சன் வர இருப்பதால் மிக விரைவிலேயே 12 ஆம் வகுப்பிற்கு இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப் தந்து விட்டார்கள். அந்த லேப்டாப்பில் வீடியோ கேம் விளையாடி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு பயத்தில் இருந்து கொஞ்சம் நேரம் மனம் ஆறுதல் அடைந்தது. ஆனால் நடக்க இருப்பதை யாராலும் தடுக்க முடியாது என்ற எண்ணம், இன்று இல்லை என்றாலும் கூடிய விரைவில் பொதுத் தேர்வு வரும், நான் தோல்வியடைவேன், எனது சொந்த பந்தங்கள் போன் செய்து நான் என்ன மார்க் எடுத்தேன் என்று கேட்பார்கள், அவர்களுக்கு முன் நான் அவமானப்பட்டு தலை குனிவேன் என்ற எண்ணம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போனது. ஒரு சமயத்திற்கு மேல் நான் பள்ளிக்கூடத்திற்கு போகவே மாட்டேன் என்று வீட்டிலேயே இருந்து கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு வாரமாக நான் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் அடம் பிடித்து என் பெற்றோர்களிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் என்ன நடந்தாலும் நீ பள்ளிக்கூடத்திற்கு போய் ஆக வேண்டும் என்ற பெற்றோர்களின் வார்த்தைகளால் சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு ஒரு யோசனை தோன்றியது பன்னிரண்டாம் வகுப்பு படித்து தோல்வி அடைந்தாலும், பள்ளிக்கூடத்திற்கு போகாமல் வீட்டிலே இருந்தாலும் நடக்கப் போவது ஒன்றே. ஆகையால் நமக்கென்ன, சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு என்ற எண்ணத்தால் வீட்டில் என் மன ஆறுதலுக்கு புதிய வீடியோ கேம்ஸ் டவுன்லோட் செய்ய இன்டர்நெட் வேண்டும் அதற்கு USB Modem வாங்கித் தந்தால்தான் நான் பள்ளிக்கூடத்திற்குப் போவேன் என்ற நிபந்தனை வைத்தேன். அன்று மாலையே Vodafone ஷோரூமுக்கு சென்று ஒரு மோடம் மற்றும் புதிய சிம் வாங்கி தந்தார்கள். அந்த சிம் போஸ்ட் பே தான் ஆனால் இன்டர்நெட் Speed பத்தவில்லை வீடியோ கேம்ஸ் என்னால் டவுன்லோட் செய்ய முடியவில்லை அதிலும் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி தான் லேப்டாப்பில் மிக விரைவிலேயே தீந்து போய்விடும். போதுமான அளவிற்கு இன்டர்நெட் வேண்டுமென்றால் மாதத்திற்கு 2000 ரூபாய் கட்ட வேண்டும். கண்டிப்பாக என் பெற்றோர்கள் தரப்போவதில்லை அப்படியே நான் வற்புறுத்தினாலும் என் மீது தான் தவறு இருக்கிறது. ஏனென்றால் அந்த சமயத்தில் Vodafone Showroom-ல் சிம்முக்கு என்ன பிளான் வேண்டும் என்ற அட்டவணையை காண்பித்தபோது அதில் தெளிவாக ஒரு நாளைக்கு எத்தனை ஜிபி என்பது பதிவாகி இருந்தது ஆனால் எனக்கு இதெல்லாம் அப்போது புதிது. என்னுடைய பயன்பாட்டிற்கு எவ்வளவு ஜிபி தேவை அதுலயும் ஸ்பீடு வேற, ஜிபி வேற என்பது எனக்கு தெரியாது. ஆகையால் விலை எது குறைவோ அதை தான் தேர்வு செய்து போஸ்ட் பே sim ஆக்டிவேட் செய்யப்பட்டது. இதுவே ஒரு வாரம் பள்ளியோடும் போகாமல் அடம்பிடித்து செய்த செலவு, மீண்டும் sim பிளானை மாற்ற வேண்டும் அதிகமான ஜிபி வேண்டும் என்று வீட்டில் நான் நிபந்தனை வைக்க வேண்டும் என்றால் புதிய சண்டை தான் போட வேண்டும். ஆகையால் இருக்கிற இன்டர்நெட்டையை பயன்படுத்திக் கொள்வோம் வீட்டில் இதையெல்லாம் சொல்லி இதற்கு மேலும் தொல்லை கொடுக்கக் வேண்டாம் என்று முடிவு பண்ணி லேப்டாப்பில் இருக்கிற வீடியோ கேமையே விளையாண்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வந்து கொண்டிருந்தேன். இருக்கிற இன்டர்நெட்டை பயன்படுத்தாமல் விட்டால் மாதம்தோறும் கட்டும் பணம் வீணாகிவிடும் என்ற பயத்தில் தினமும் இன்டர்நெட் தீரும் வரை கூகுளில் எதையாவது தேடிக் கொண்டிருப்பேன், சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பேன், புதிய புதிய வெப்சைட்டுக்கு போய்க் கொண்டிருப்பேன். ஒரு நாள் இப்படி தான் சன் டிவியில் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தேவைப்படும் இன்ஜினியர்களை பேஸ்புக் குரூப் மூலம் தனுஷ் ஒன்று சேர்ப்பார். அதை பார்த்துவிட்டு தான் முதல் முதலில் சமூக வலைத்தளத்தில் ஒன்றான பேஸ்புக்கில் எனக்கென கணக்கையே திறந்து தெரியாத எல்லாரிடமும் பிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இப்படியே நாட்கள் கடந்து +2 பொதுத்தேர்வும் வந்துவிட்டது. என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன் அதே சமயம் வீட்டில் நான் பெயில் ஆகி விடுவேன் என்று சொல்லிக் கொண்டே தேர்வு எழுதி வந்தேன். கண்டிப்பாக ஃபெயில் ஆவேன் என்ற நம்பிக்கையில் பொது தேர்வு விடுமுறை முழுக்க கவலையின்றி வீடியோ கேம் விளையாடுவதும் இன்டர்நெட்டை பயன்படுத்துவது என்றே சந்தோசமாக பொழுது கழிந்தது. ஆனால் நான் எதிர்பார்க்காத வகையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் Just Pass ஆகிவிட்டேன். OMG... சொந்த பந்தங்களிடம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மார்க் இல்லை என்றாலும் பெயிலாகி விட்டேன் என்று சொல்வதை விட இது எவ்வளவோ பரவாயில்லை என மனதை தேத்தி கொண்டேன். இதன் பிறகு என் அப்பா அடுத்து நீ என்ன பண்ண போற? என்ன படிக்கப் போற? என்று கேட்டார். நான் விஸ்காம் படிக்க விரும்பினேன், காரணம் கடந்த இரண்டு வருடமாக அடிக்கடி சன் டிவி மற்றும் விஜய் டிவியில் நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திருந்தார்கள். அதை பார்த்து பார்த்து எனக்கு சினிமா துறையில் ஒரு ஆசை வந்தது. நானும் படம் எடுக்க வேண்டும் அதற்கு டைரக்டர் படிப்பை படிக்க விரும்பினேன். இணையதளத்தில் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்றால் என்ன படிக்க வேண்டும் என்று தேடிய போது விஸ்காமில் ஒரு டிபார்ட்மெண்ட் டைரக்டருக்காக இருக்கிறது. அதை படித்தால் டைரக்டர் ஆகலாம் என்று தெரியவந்தது. அதனால் என் அப்பாவிடம் நான் விஸ்காம் படிக்க விரும்புகிறேன் என்று சொன்னேன் அது மட்டும் இன்றி சென்னையில் உள்ள ஒரு காலேஜ் அட்மிஷன் மற்றும் டிபார்ட்மெண்ட்டை பற்றின சிறு குறிப்புகள் அடங்கிய தொகுப்பையும் இணையதளத்திலிருந்து ஜெராக்ஸ் எடுத்து அப்பாவிடம் காண்பித்தேன். அப்பாவும் சரி என்று தான் கூறினார் ஆனால் அன்று அவரது ஆபீஸரிடம் இதைப்பற்றி பேசிவிட்டு இரவு வீடு திரும்பும் போது மறுத்துவிட்டார் என்று சொல்வதைவிட, என் வாயிலிருந்து மறுப்பை சொல்ல வைத்தார். அன்று இரவு என் அப்பா இந்த மாதிரி நீ விஸ்காம் படிக்கணும் சொன்னத ஆபிசர் கிட்ட விசாரிச்சு பார்த்தேன். அவர் என்ன சொல்றாருன்னா ஆபீஸர் ஒரு தடவ சென்னையில் இருக்கும்போது அவர் தங்கி இருந்த மேன்ஷன்ல 90 சதவீதமான நபர்கள் சினிமாவில் ஏதாவது சாதிக்கணும்ன்றதுக்காக விஸ்காம் படிச்சிட்டு, வாய்ப்பு தேடி அலைஞ்சுகிட்டு, பெட்ரோல் பங்கிலும், ஹோட்டலையும் வேலை பாத்துட்டு இருக்காங்க. இதை படிச்ச எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படின்னு சொன்னதா என்கிட்ட வந்து சொன்னாரு. எனக்கு அறிவுரை சொல்ற மாதிரியே என்னோட அப்பா இன்ஜினியரிங் படிக்கிறது தான் எதிர்காலம் அப்பதான் நீ நல்லா இருப்ப ஆனா நீ எடுத்த மார்க்குக்கு இன்ஜினியரிங் கிடைக்காது. ஆனால் டிப்ளமோ மெக்கானிக்கல் முடிச்சிட்டு இன்ஜினியரிங்ல மெக்கானிக்கல் சேர்ந்தன 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பார்க்கப்பட மாட்டாது. இன்னைக்கு நீ எடுக்கிற முடிவு தான் நாளைக்கு உன்னுடைய எதிர்காலத்தை முடிவு பண்ணனும் அப்படி, இப்படி... என்று பேசி என்னை மறுக்க வச்சுட்டாரு. மறுநாளே தூத்துக்குடியில் உள்ள நாசரத் என்னும் இடத்தில் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் என்னும் காலேஜில் டிப்ளமோ மெக்கானிக்கல் காண அட்மிஷனை வாங்கி விட்டார். இதைப் படிப்பதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை ஆனால் அந்த சமயத்தில் என் அப்பாவுக்கும் என் அம்மாவுக்கும் சில பல சண்டைகள் உக்கிரமாக போய்க் கொண்டிருந்தது. அதனால் என் அப்பாவை விட்டு விலகி இருக்க விரும்பினேன். எப்படியாவது வீட்டை விட்டு வெளியே இருந்தா போதும் எதுலையாது சேர்ந்து படிப்போம் அங்கேயே ஹாஸ்டல்ல தங்கிடுவோம் அப்படின்னு முடிவு பண்ணி ஒத்துக்கிட்டேன். என் அப்பா ஆசைப்பட்ட மாதிரியே தூத்துக்குடியில் டிப்ளமோ மெக்கானிக்கல் படிப்பை தொடர்ந்தேன்.
![]() |
| Jayaraj Annapackiam C.S.I College 2015-2018 Mechanical Department Group Photo |
இது ஒரு கிறிஸ்டின் காலேஜ் அப்படிங்கறநால கிறிஸ்தவ வழிமுறையை மாணவர்களுக்கு வற்புறுத்தலோடு கூடிய திணிப்பு வெளிப்படையாக நடந்தது. அந்த மாணவன் ஹிந்துவா, கிறிஸ்டினா, முஸ்லிமா என்பதை பற்றின எந்த ஒரு பகுத்தாய்வும் இல்லாமல் அனைவரும் கிறிஸ்தவ வழிமுறையை வழிபட்டே ஆக வேண்டும் என்பதைப் போல் காலை பிரேயரில் தேசிய கீதத்துடன் கூடிய கிறிஸ்துவ பாடல்களும், போதனைகளும், நடக்கும். அவ்வப்போது கிறிஸ்துவ போதனை கூட்டம் காலேஜ் குள்ளயே நடக்கும், அதில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். திங்கள்கிழமை ஆகிவிட்டால் ஹாஸ்டலில் இருக்கும் அனைத்து மாணவர்களும் காலேஜ் கேம்பஸ் குள்ளயே இருக்கும் சாப்பளுக்கு சென்றே ஆக வேண்டும். அங்கு நடக்கும் போதனைகளை கிறிஸ்துவ முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மறுப்பவர்கள் ஹாஸ்டல் வார்டன் அல்லது சக மாணவர்களாலேயே தொல்லைகளை அனுபவிக்க நேரிடலாம். ஆகையால் வாத்து கூட்டத்தைப் போல் சுத்தி இருக்கும் நபர்கள் எப்படியோ அப்படியே நானும் முதல் வருடத்தை சகித்துக் கொண்டு அந்த காலேஜின் ஹாஸ்டலில் நாட்களைக் கழித்தேன். இது எல்லாத்தையும் விட நான் தங்கி இருந்த அந்த ஹாஸ்டலில் மாலை இரண்டு மணி நேரம் அதாவது 4:30 மணிக்கு காலேஜ் முடியும் 5:00 to 6:00 மணி வரை கிறிஸ்தவ பாடல்களை பெரிய ஸ்பீக்கரில் போட்டு வார்டன் அலறவிடுவார். இருக்கிற தொல்லையிலேயே இதுதான் பெரிய தொல்லை. எப்ப பார்த்தாலும் ஒரு 10-ல இருந்து 15 பாட்டு அழுத தோரணையிலேயே லூப்ல பாடிகிட்டே கிடக்கும். அதைக் கேட்டாலே மன அழுத்தத்திற்கு ஆளாகி விடும். அந்த அளவுக்கு இப்பாடல்கள் என்னால் வெறுப்பை சம்பாதித்தது. ஆனால் இதை வேண்டாம் என்று யாராலும் சொல்ல முடியாது. அதுலயும் என்னதான் கிறிஸ்துவ மாணவர்கள் ஹாஸ்டலில் குறைவாக இருந்தாலும் புரிதல் இன்றி வேறு மதத்து மாணவர்கள் கிறிஸ்தவ போதனைக்கு ஆதரவாளர்களாகிய மாணவர்கள் தான் அதிகம். இவர்களால் இதற்கெல்லாம் எதிராக இருக்கும் மாணவர்களை தொல்லை செய்யக்கூடும். என் அப்பாவால் சில பல துன்புறுத்தலுக்கு கடந்த சில வருடங்களாக ஆளாகி இருந்தேன் அதற்கு இந்த கிறிஸ்துவ திணிப்பு தொல்லையை சகித்துக் கொள்வது எவ்வளவோ பரவாயில்லை என்று நான் எந்த ஒரு எதிர்ப்பும் காண்பித்துக் கொள்ளவில்லை.
இந்த ஒரு சமயத்தில்தான் பெங்களூரில் இருந்து சூர்யா என்னும் மாணவன் 1 year ஸ்டுடென்ட் ஆக கல்லூரியில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தான். நானே எதிர்பார்க்கவில்லை அவன் என்னை விட சின்னப் பையன் தான் ஆனால் அவனோடு நல்ல நட்பு உருவாகியது. கல்லூரியின் விதிமுறைப்படி எந்த ஒரு டிப்ளமோ காலேஜ் மாணவர்களும் செல்போன் கேம்பஸ் உள்ளே வைத்திருக்கக் கூடாது. ஆனால் திருட்டுத்தனமாக நிறைய மாணவர்கள் ஹாஸ்டலுக்குள் செல்போன் வைத்திருந்தார்கள். ஒருவேளை ஏதாவது பிரச்சனை அல்லது வார்டன் செக்கப் வந்தால் இன்ஜினியரிங் காலேஜ் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியும் பக்கத்திலேயே இருக்கிறது. அதாவது எங்களது கேம்பஸுக்குள் டிப்ளமோ காலேஜ் தனியாகவும், இன்ஜினியரிங் காலேஜ் தனியாகவும் இருக்கிறது. எங்களைப் போலவே இன்ஜினியரிங் காலேஜை சேர்ந்த சில மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கென தனி அறைகள் மற்றும் வேறு ஒரு வார்டன் இருக்கிறார். அது ஏன் என்று தெரியவில்லை, இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டூடண்ட் மட்டும் செல்போன் வைத்திருக்க அனுமதி இருந்தது. ஆகையால் டிப்ளமோ காலேஜ் மாணவர்கள் தங்களது செல்போனை இன்ஜினியரிங் காலேஜ் நண்பர்களிடம் அவ்வப்போது கொடுத்து ஒழித்து வைத்திருப்பார்கள். அப்படிதான் சூர்யாவும் ஒரு செல்போன் வைத்திருந்தான். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை என்பதால் சில மாணவர்கள் வீட்டிற்கு சென்று விட்டார்கள் ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை கேண்டின் கிடையாது வெளியூரு மாணவர்கள் மட்டுமே ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு விடுதியில் தங்கி இருப்பார்கள். எல்லாரும் அவர்களது ரூமுக்குள் பேசி விளையாட்டு கொண்டு, திருட்டுத்தனமாக செல்போனையும் பயன்படுத்தி படம் பார்த்துக்கொண்டு நேரத்தை செலவு செய்தனர். அப்படித்தான் சூர்யாவும் மதியம் சாப்பிட்டு விட்டு எனது அறையில் தூங்க வந்தான், இது அவனது அரை கிடையாது ஏனென்றால் 1 year மாணவர்களுக்கு வேறு அறை, 2 year மாணவர்களுக்கு வேறு அறை ஆனால் காலையிலிருந்து மதியம் வரை என்னோடும் என்னுடைய ரூம் மேட் கூட பேசி சிரித்ததால் அந்த நட்பிலேயே எங்கள் அறையில் படுத்துக்கிட்டு பேசிக் கொண்டு இருந்தான். எனக்கு பெரிதாக பொழுது போகவில்லை, தூக்கமும் மதிய வேளையில் வராது. ஆகையால் சூர்யா வைத்திருந்த ஃபோனில் ஏதாவது நோண்டலாம் என்று அவனிடம் கேட்டேன். அவனும் earphone-னுடன் தந்து விட்டான். சூர்யா வைத்திருந்தது ஒரு சாதாரண பட்டன் போன் தான், அதில் வீடியோ கேம் விளையாடலாம். ஆகையால் கொஞ்ச நேரம் Game விளையாண்டு கொண்டிருந்தேன். பிறகு வழக்கம் போல் வேறு ஏதாவது இருக்கிறதா என நோண்ட ஆரம்பித்தேன். அப்படிதான் எஃப் எம் ஆப் கண்ணில் தட்டுப்பட்டது. சரி கொஞ்ச நேரம் ஏதாவது பாடல் கேட்போம் என எஃப் எம் ஐ ஆன் செய்து ஸ்டேஷன் செட் செய்தேன், அன்று மதியம் அப்போதைய புது படங்களில் இருந்து சில பாடல்கள் போட்டார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த நான் கொஞ்ச நேரத்தில் அந்தப் பாடலை ஏதோ நானே என் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பாடுவதைப் போல் நினைத்து பார்த்தேன். அது மிகவும் சுவாரசியமாக இருந்தது. மேலும், மேலும் சில பாடல்கள் கேட்டுக்கொண்டே கற்பனை உலகத்தில் அந்த பாடலுக்கான கலைஞனாக என்னை நினைப்பதும், என்னை நான் கதாநாயகன் போல் உணர்வது எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இப்படியே பாடல்களை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தேன். அன்றுதான் எனக்கு இசையை எப்படி ரசிக்க வேண்டும் என்பதே புரிந்தது. என்னைப் போன்று தான் மற்றவர்களும் ரசிக்கிறார்கள் என்று நான் கூறவில்லை ஆனால் எனக்கு இப்படி ரசிக்க தான் பிடித்திருக்கிறது. இதன் பிறகு அவ்வப்போது என் நண்பர்களின் செல்போனை வாங்கி பாடல்களை கேட்பதும், கற்பனை செய்வதும் என இசையின் மீது கொஞ்சம் கொஞ்சமாக பிடிப்பு வந்தது.
இதன் அடுத்த கட்ட பரிணாமமாக எனது அறையில் பரமசிவம் என்ற ஒரு மாணவன் டச் ஆண்ட்ராய்டு போன் வைத்திருந்தான். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடி நம்பர் 1 இல் இருந்தபோது செய்த நகைச்சுவை சம்பவங்களை ஐந்து, ஆறு, வீடியோவாக பதிவிறக்கம் செய்து வைத்திருந்தான். அவ்வப்போது அவன் அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பதை கவனித்தேன். அதனால் ஒரு நாள் இரவு நான் கேட்டேன் அவனும் தந்தான். அன்று இரவு நானும் சிவகார்த்திகேயனின் நகைச்சுவையால் விழுந்து விழுந்து சிரித்து அடுத்தடுத்த வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படிதான் அவனது செல்போனில் சிவகார்த்திகேயன் நகைச்சுவை வீடியோ மட்டுமல்லாமல் சில வீடியோ சாங்ஸ்ம் இருப்பதை கவனித்தேன். அதை பார்த்தபோது என் கண்களை சிமிட்ட கூட தோணவில்லை. அந்த அளவிற்கு high quality visuals, சிறந்த சவுண்ட், அழகான பெண், ஆடம்பரமான கார்கள் மற்றும் அறைகள் இளைஞர்களை ஈர்க்கும் கதைக்களம் கொண்ட Yo Yo Honey Singh கலைஞனின் Brown Rang பாடலை முதல் முறையாக பார்த்தேன், கேட்டேன். இதை தொடர்ந்து இன்னும் ஒரு சில வீடியோ சாங் இருந்தது. அதையும் இரவு முழுக்க பலமுறை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டே விடிந்து விட்டது. நான் தூங்கவே இல்லை. மறுநாள் பரமசிவம் இடம் இந்தப் பாடல்கள் எங்கிருந்து உனக்கு கிடைத்தது எனக் கேட்டேன். அப்போது தான் தெரியவந்தது பக்கத்து அறையில் மெல்வின் என்ற மும்பையை சேர்ந்த தமிழ் மாணவன், அவனுடைய செல்போனிலிருந்து தான் பரமசிவம் பதிவிறக்கம் செய்திருக்கிறான். பிறகு ஒரு நாள் மெல்வின் இடம் இன்னும் ஒரு சில பாடல்களை பரமசிவம் செல்போனில் ஏற்றி தர சொன்னேன். அதற்கு அவன் அவனுடைய போனவே எனக்கு கொடுத்து விட்டான். நான் எதிர்பார்க்கவே இல்லை Yo Yo Honey Singh-ன் Dheere Dheere, Love Dose, Brown Rang, ONE BOTTLE DOWN, Desi Kalakaar, Blue Eyes, char botal vodka மட்டுமல்லாமல் அயல் நாட்டு கலைஞர்களின் புகழ்பெற்ற hip don't lie, don't wake me up, Rain Over Me, International Love. Calle Ocho, Limbo, gasolina மற்றும் Vidya Vox என்னும் பாடகியின் கவர் சாங்ஸ் என சில பாடல்களும் வைத்திருந்தான். இன்னும் தெளிவாக சொல்லப் போனால் நான் முதல் முதலில் இன்டர்நெட் உடன் பயன்படுத்திய ஆண்ட்ராய்டு போன் அவனுடையது தான் ஆனால் இன்டர்நெட்டை பயன்படுத்த எனக்குத் தோன்றவில்லை அந்த அளவிற்கு விடிய விடிய அவன் செல்போனில் இருந்த அனைத்து பாடல்களையும் திருப்பித் திருப்பி கேட்டுக் கொண்டே இருந்தேன். எனது கண்கள் சோர்வடையவில்லை, எனது கற்பனை உலகத்திற்கு புதிய inspiration கிடைத்தது. பாடல்கள் மீதான எனது ரசனை வேறொரு தளத்திற்கு அன்று இரவு போனது. இப்படியே சில நாட்களும், இரவுகளும் கடந்து காலேஜின் முதல் செமஸ்டர் முடித்து விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றேன்.
இந்த காலேஜில் சேரும்போது திருநெல்வேலியில் தான் எனது வீடு ஆனால் காலேஜில் சேர்ந்த பிறகு அப்பாவிற்கு பாண்டிச்சேரியில் வேலை இடமாற்றம் செய்யப்பட்டதால் முதல் செமஸ்டர் லீவில் முதல்முறையாக வெகு தூரம் தனியாக பயணம் செய்தேன். இந்த பயணம் எனக்கு புதிது, மாலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து பாண்டிச்சேரிக்கு பஸ் கிளம்பினால் மறுநாள் காலை தான் சென்றடையும். அதுவரை வேடிக்கை பார்ப்பது மட்டுமே எனது வேலை. இந்த சமயத்தில்தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ என்ற ஒரு புதிய சிம் அறிமுகப்படுத்தி இருந்தார்கள். அதுவும் மூன்று மாதம் இலவசமாக இன்டர்நெட், டாக் டைம் மற்றும் எஸ் எம் எஸ் சேவைகளை வழங்கி இருந்தார்கள். அதனாலயே என்னமோ தெரியல அருகில் பயணிக்கும் நபர்கள் எப்போதும் இயர்போனுடன் இருப்பதை கவனித்தேன். ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு மாதிரி நேரங்களை செலவு செய்தனர். சில நபர்கள் சமூக வலைதளத்திலும், சில நபர்கள் படம் பார்த்துக்கொண்டோம், இன்னும் ஒரு சிலர் பாடல்களை கேட்டுக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் எனக்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டேன் பயணிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் எனது துரதிஷ்டம் அப்போது என்னால் செல்போன் வாங்க முடியாது. வீட்டில் கேட்டாலும் வாங்கி தர மாட்டார்கள். எப்படியாவது செல்போன் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் இரவு முழுக்க மனதில் இருந்தது. இதனைத் தொடர்ந்து மறுநாள் பாண்டிச்சேரியில் என் பெற்றோர்கள் இருக்கும் வீட்டிற்கு சென்று விட்டேன். அன்று வெகு நாட்களுக்குப் பிறகு எனது லேப்டாப்பையும் மற்றும் யுஎஸ்பி இன்டர்நெட் மோடமையும் பயன்படுத்தி youtubeல் பாடல்களை கேட்டுக் கொண்டே இருந்தேன். இந்த சமயத்தில் என்னிடம் ஃப்ரீ பிளான் சிம் தான் இருந்தது. நான் கல்லூரியில் படிப்பதால் யார் இன்டர்நெட்டை பயன்படுத்த போகிறார்கள் என்று மோடமிலிருந்த போஸ்ட் பே சிம் டீஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது. ஆகையால் அம்மாவின் செல்போனில் போஸ்ட் பே சிம் இருக்கிறது அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட அமௌன்ட் ஃப்ரீ பிளான்ட் சிம்முக்கு ரீசார்ஜ் செய்ய முடியும். இதை பயன்படுத்தி நைட் பேக் இன்டர்நெட் போட்டு இரவு முழுக்க விழித்திருந்து எவ்வளவு வீடியோ சாங்ஸ் டவுன்லோட் செய்ய முடியுமோ அவ்வளவு வீடியோ சாங்ஸ் டவுன்லோட் செய்தேன். இப்படி தான் ஒரு நாள் எதர்ச்சியாக மைக்கேல் ஜாக்சன் "Beat It" என்ற பாடலை ஒரு லோக்கல் சேனலில் முதல் முறையாக பார்த்தேன் அதுக்கு முன் வரை மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரை சினிமாவில் ஒரு சில நபர்கள் சொல்லி தான் கேட்டிருக்கிறேன் அவரது பாடலை இப்பதான் முதல்முறையாக பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை ஒரு பாடலில் இவ்வளவு கலைநயத்துடன் ஆடலை திணிக்க முடியும் என்பதை. அவரது பாட்டுக்கு ரசிகன் ஆன ரசிகர்களை விட அவருடைய நடனத்திற்கு ரசிகன் ஆன ரசிகர்களே அதிகம். அந்த வகையில் நானும் ஈர்க்கப்பட்டேன் இதன் பிறகு அன்று இரவு முழுக்க, முழுக்க மைக்கேல் ஜாக்சன் வீடியோ சாங்ஸ் டவுன்லோட் செய்ய ஆரம்பித்தேன். மறுநாள் என் தலைக்குள் மைக்கேல் ஜாக்சன் மட்டுமே ஒலிம் ஒழிம் ஆக இருந்தார். இந்த ஒரு சமயத்தில்தான் எனது வாழ்க்கையில் முழுமையாக பாடலை வெறுத்த ரிஷோகனிலிருந்து பாடலை ரசிக்கும் Rishokan ஆக மாறினேன். இந்த ஒரு மாற்றத்திற்கு என் பெற்றோர்களிடம் அடியெல்லாம் கூட வாங்கினேன் ஏனென்றால் இரவு நேர இன்டர்நெட்டை என் அம்மாவின் போஸ்ட் பே சிம்மில் இருந்து ரீசார்ஜ் செய்ததால் பில் எகிறி விட்டது. அதை விடுங்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டும் தூத்துக்குடிக்கு நான் செல்ல வேண்டும் செமஸ்டர் லீவ் முடிவடைய போகிறது. அதற்கு முன் பாடல்களை கேட்கும் போதைக்கு அடிமையான நான் பயணத்தின் போது பாடல் கேட்பதற்காக செல்போன் வாங்க முடியவில்லை என்றாலும் ஒரு Mini Fm Box with Earphone உடன் வாங்கி விட்டேன், இதில் மெமரி கார்டு மூலமாகவும் பாடல்களை ஏற்றியும் கேட்க முடியும். இதில் பாடல்களைக் கேட்டுக் கொண்டே கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் பாண்டிச்சேரியில் இருந்து தூத்துக்குடிக்கு பயணம் செய்தேன், அதுவும் ஒவ்வொரு பாடலை நான் கேட்கும் போது என் மனதிற்குள் வேறு ஒரு கற்பனை வீடியோ சாங்கில் மிதந்து கொண்டே காலேஜ் விடுதிக்கு வந்து விட்டேன். விடுதியில் ஒவ்வொரு நாள் இரவும் குறைந்தது ஒரு மணி நேரமாவது Mini Fm Box, அல்லது நண்பர்களின் செல்போனில் வீடியோ சாங் பார்த்த பிறகு தான் தூங்குவேன். இந்த பழக்கத்தால் தனிமை பிடித்தது. அதேசமயம் ஹாஸ்டல் செல்போன் போன்ற இதரப் பொருட்கள் அனுமதி இல்லை என்பதால் தூத்துக்குடியில் இருந்து ஒவ்வொரு சனி ஞாயிறு விடுமுறைக்கும் திருநெல்வேலியில் இருக்கிற Auto CAD சென்டருக்கு படிக்கச் செல்வதாக கல்லூரியில் அனுமதி பெற்று போய் வந்தேன். பயணத்தின் போது பாடல்களை கேட்டு என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ஓரளவிற்கு இந்த மாதிரியான நாட்கள் சலிப்பின்றி பழகி நகர்ந்து போனது.ஆனால் விதி யாரை விட்டது எனது போதாத காலம் முதலாம் வருடம் முடிய சில பல மாதங்களிலே இருந்த சமயத்தில் ஒரு நாள் திங்கள்கிழமை, சாப்பல்லில் வழிபாட்டின் போது புதிதாக கிறிஸ்துவ போதனைகள் அச்சிட்ட சிறு அட்டைத் துண்டு அனைத்து மாணவர்களுக்கும் தரப்பட்டது. வழக்கம் போல் வழிபாடும் முடிந்து ஹாஸ்டல் ரூம் திரும்பியபோது எனது ரூமுக்குள் எனக்கு வழங்கப்பட்ட அந்த கிறிஸ்தவ போதனை அட்டையை கீழே போட்டு விட்டேன். அதை பார்த்த எனது சக ரூம் மேட் மாணவர்களால் தகாத வார்த்தையிலும், தாக்குதலுக்கும் ஆளானேன். நாள் போக்கில் தினமும் அவர்கள் என்னை கிண்டல் அடிப்பதும், திட்டுவதும், எனது பொருள்களை திருடுவது, தூங்கிக் கொண்டிருக்கும்போது கல் உப்பை ஹாஸ்டல் கிச்சனிலிருந்து எடுத்து வந்து என் மூஞ்சியில் எரிந்து விட்டு ஓடுவதும், நடு இரவில் பேய் போன்ற வேஷமிட்டு பயமுறுத்த முயற்சி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். இதை நான் வெளிப்படையாக எதிர்த்து அவர்களிடம் சண்டைக்கு நின்றாள் எனக்கு நண்பனாக இருந்த சிலரும் திடீரென நடு இரவில் ரூமுக்கு வந்து என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். நாளுக்கு நாள் மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போனது. எந்த அளவுக்குன பாடல்களைக் கேட்கும்போது என் மனதில் உருவான கற்பனை வெல்லம் காணாமல் போய் காதில் பாடல்கள் கேட்டாலும், மனம் முழுக்க மாணவர்களால் உருவான சண்டை நிகழ்வை மட்டுமே சுயநினைவின்றி யோசித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் என் அப்பாவிடம் அழுகாத குறையா தயவு செஞ்சு எனக்கு வெளியே ஏதாவது வீடு பார்த்து தந்திருங்க, நான் அங்க இருந்தே காலேஜ்க்கு வரேன் அப்படின்னு கேட்டேன். எனது நல்ல நேரம் எப்படியோ மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த ஒரு கேரள மாணவன் சக மாணவர்கள் இடையே ஏற்பட்ட சில வாக்குவாதத்தின் காரணமாக வெளியே வீடு எடுத்து தங்கி காலேஜுக்கு வந்து கொண்டிருந்தார். அவரிடம் நீங்க மூன்றாம் வருடத்தின் முடிவில் வீட்டை காலி செய்யும் போது நான் வந்து கொள்கிறேன் என பேசி. வீட்டு ஓனர் கிட்டையும் இதை பத்தி பேசி அப்பாவை வரவழைத்து அந்த வீட்டு ஓனருக்கு அட்வான்ஸ் கொடுத்து எனக்கென தனி அறையை ஏற்பாடு செய்து விட்டேன்.
முதலாம் வருட செமஸ்டர் முடியப் போகிற சமயத்தில் எனது மற்றொரு days காலர் மாணவ நண்பன் சண்முகவேல் (nickname: ஜெக), இன்னொரு மாணவனிடம் பேசி எனக்காக 1000 ரூபாய்க்கு yxtel ஆண்ட்ராய்டு போன் வாங்கித் தந்தான். இதுதான் நான் முதன் முதலில் வாங்கி பயன்படுத்திய என்னுடைய ஸ்மார்ட்போன், ஆனால் இது 3ஜி செல்போன் என்பதால் அப்போது பெரும்பாலானோர் பயன்படுத்திக் கொண்டிருந்த jio 4g சிம் என்னால் வாங்க முடியவில்லை. ஆனால் என்னிடம் இருந்த பிரிப் பே ஐடியா சிம்மை பயன்படுத்தி அவ்வப்போது 3g இன்டர்நெட் உபயோகப்படுத்தினேன். முதலாம் வருட செமஸ்டர் முடிந்தது வீட்டிற்கு சென்றேன். மீண்டும் வழக்கம்போல் அம்மாவின் செல்போனில் இருந்து அல்லது கையில் இருக்கும் காசை பயன்படுத்தி இன்டர்நெட் 1 ஜிபி, 3ஜிபி என போட்டுக்கொண்டு யூட்யூபில் வீடியோ சாங் பார்ப்பதும், கேட்பதும். சமூக வலைத்தளங்களை ஆராய்வதும், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இந்த ஒரு சமயத்தில்தான் யூடியூபில் ஏதாச்சியாக யூடியூப் மூலம் எப்படி சம்பாதிப்பது என்ற "tamil tech" channel creator mr. Tamil அவர்களின் வீடியோவை பார்த்தேன். அப்போதெல்லாம் வெறும் பத்தாயிரம் வியூஸ் overall சேனலுக்கு வந்தால் போதும் youtube விளம்பரங்களை வாங்கி சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம். மேலும் இது சம்பந்தமா யூடியூபில் ஆராய்ந்தேன். அப்போதான் எனக்கு தெரியவந்தது நான் படித்த DVP வீணாகவில்லை யூடியூபில் சம்பாதிக்க மிகவும் உதவும் என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனால் எல்லாம் அமைந்து வர நேரமாகும் அல்லவா என்னிடமிருந்த yxtel ஆண்ட்ராய்டு போன் ஒன்னு சொல்லிக்கிற வகையில் கேமரா கிடையாது. ஆகையால் யூட்யூபில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என்னுள் விதைக்கப்பட்டது. இப்படியே விடுமுறையும் கழிந்து மீண்டும் இரண்டாம் ஆண்டுக்கு நான் எடுத்த தனி அறை வீட்டிற்கு வந்தேன். இந்த ஒரு சமயத்தில் என்னுடன் லேப்டாப்பையும் எடுத்து வந்து விட்டேன். கல்லூரி வாழ்க்கையில் எனக்கு படிப்பு ஒன்னும் சுமையாக தெரியவில்லை, ஏனென்றால் டிப்ளமோ-வில் முதல் சாதகமான விஷயம் தமிழிலும் புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். ஆங்கிலம் எனக்கு ஒன்னும் கஷ்டமானது கிடையாது ஆனால் பழக்கம் இல்லை என்பதால் தமிழை தேர்வு செய்து இருந்தேன். இதனால் அதிகபட்சமான புத்தகம் முழுக்க முழுக்க கதைகளால் நிறைந்து தான் இருக்கும். பரிட்சையிலும் அதே கதையை ஒப்பிப்பது எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. ஆனால் கணக்கு பாடம் ஒன்றே ஒன்று இருந்தது அதற்காக மட்டுமே தான் கஷ்டப்பட்டேன். இதனால் தினமும் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பும் போது என்னுடைய கல்லூரியின் நண்பர்களில் ஒருவன் ஷாம் என்பவனிடமிருந்து தினமும் பென் டிரைவில் ஹாலிவுட் படங்களை ஏற்றி கொண்டு வந்து லேப்டாப்பில் பார்ப்பது அப்படியே தூங்குவது, மீண்டும் காலை கிளம்பி கல்லூரிக்கு செல்வது திரும்பவும் அதேபோல் ஏதாவது புது படங்களை ஏற்றி கொண்டு வந்து மாலையில் இருந்து இரவு தூக்கம் வரும் வரை பார்ப்பது என நாட்களை சுமூகமாக நகர்த்தினேன். இந்த ஒரு சமயத்தில் ஒரு முழு சுதந்திரத்தை அனுபவித்தேன் என்று கூறலாம். இந்த ஒரு சமயத்தில் பாடல்களை கேட்கும் பழக்கம் குறைந்தது. ஆனால் பெரும்பாலும் நான் எடுத்து தங்கி வரும் அந்த அறையில் சமைப்பதற்கான பொருட்கள் இருந்தாலும் நான் சமைப்பதில்லை வெளியே சென்று தான் சாப்பிட்டு வருவேன். அப்படி வெளியே சென்று நான் சாப்பிட்டு வர வேண்டுமென்றால் வெகு தூரம் நடந்து ஊருக்குள் செல்ல வேண்டும். ஏனென்றால் காலேஜ் மற்றும் அதன் அருகில் நான் எடுத்திருக்கும் அறையும் ஒரு தனித்த காட்டிற்குள் கட்டப்பட்ட வீடுகள் போன்று தான் இருக்கும். ஹோட்டல் ஏதாவது வேண்டுமென்றால் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து சென்று அணுக வேண்டும். பெரும்பாலும் Tea-யை மட்டும் அரை லிட்டர் தண்ணி கலக்காத பாலில் போட்டு குடித்த வண்ணமே இருப்பேன். அது எனக்கு பசியை வரவிட்டதில்லை. கல்லூரிக்கு டிபன் கொண்டு செல்லும்போது வெறும் சோற்றை மட்டும் ஆக்கி எடுத்துச் செல்வேன் எனது இரு Best பிரண்ட்ஸ் சீனிவாசன் மற்றும் சுப்பிரமணி எனக்காக குழம்பு எடுத்து வருவார்கள். ஆனால் அறையில் இருக்கும் போது சில சமயங்களில் சரி ஏதாவது போய் சாப்பிடலாம் என்று நடந்து செல்வேன் அப்படி நடந்து செல்லும் போது Mini Fm அல்லது செல்போனில் பாடல்களை கேட்டுக்கொள்வது வழக்கமாக இருந்தது. இப்படியே இரண்டாம் ஆண்டின் முதல் செமஸ்டர் முடிந்து மீண்டும் வீட்டிற்கு கிளம்பினேன். இம்முறை தூத்துக்குடியில் இருந்து பாண்டிச்சேரிக்கு பாடல்களை கேட்டுக் கொண்டே இரவு முழுக்க பிரயாணித்து வீடு வந்து சேர்ந்தேன். நான் எதிர்பாராத வகையில் எனது பெற்றோர்கள் சாம்சங் நிறுவனத்தின் வாஷிங் மெஷின் முதல் முறையாக வாங்கி இருந்தனர். அந்த வாஷிங் மிஷினுக்கு இலவசமாக samsung j5 என்கிற ஒரு 4G மொபைல் போன் வழங்கினர். அதை என் அப்பா எனக்கு தந்துவிட்டார், ஏனென்றால் அவருக்கு இதை பயன்படுத்தத் தெரியாது. எனக்கும் இன்டர்நெட்டை அளவின்றி பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையில் வாங்கி மறுநாளே Jio 4G Sim அன்லிமிடெட் இன்டர்நெட் பேக் உடன் வாங்கி விட்டேன். இதன் பிறகு தான் உண்மையான கதையே ஆரம்பித்தது.
இன்டர்நெட் அன்லிமிடெட் என்பதால் எனது உபயோகம் சில சமயம் 24 மணி நேரமும் இருந்தது, தூங்காமல் கொள்ளாமல் இணையதளத்தில் ஏதாவது ஒன்றை தேடுவது, வீடியோ சாங் கேட்பது சமூக வலைத்தளங்களில் எனக்கான கணக்குகளை திறப்பதும், பயன்படுத்துவதும், அந்நிய நபர்களிடம் பேஸ்புக் மூலம் தொடர்பு கொள்வதும், புதிய நட்புகளை இணையதளத்தில் உருவாக்குவதும் என நாட்கள் ஒரு துளி கூட சலிப்பின்றி நகர்ந்தது. இந்த ஒரு சமயத்தில் தான் யூடியூபில் எனக்கான ஒரு சேனலை திறந்தேன், அதற்கு நான் வைத்த பெயர் "Vs Professional Group"
samsung j5 செல்போன் ஒன்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறந்த கேமராக்கள் கொண்டது கிடையாது. ஆனால் எனக்கு அந்த சமயத்தில் தெரியாது என் முகம் தெரிகிறது இதைவிட என்ன வேண்டும் என்பதால் குவாலிட்டி புரியாமலேயே Youtube Channel-க்கு சில வீடியோக்கள் உருவாக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் டெக் யூடியூப் சேனல்களில் எனக்கு ஆர்வம் இருந்ததால் புதிய ஆண்ட்ராய்டு App-களை ரிவ்யூ செய்வது போன்ற வீடியோக்கள் உருவாக்கினேன். சில சமயம் மர்மக் கதைகளை பேசி ஸ்லைடு ஷோ வீடியோவாக எடுத்து வெளியிட்டேன். ஆனால் பெரிதாக வியூஸ் வரவில்லை. இதற்கு காரணம் Youtube key factors என சொல்லப்படும் topic, quality, presentation, consistency, என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. வீடியோ போட வேண்டும் என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த விஷயம். ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு youtube இல் எப்படி ஒரு வீடியோவை உருவாக்க வேண்டும், அதில் Views வரவேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும், என்பது போன்ற விஷயம் சிறிது சிறிதாக youtube வீடியோக்கள் மூலமாகவும் அனுபவங்கள் மூலமாகவும் தெரியவந்தது. பின்பு செமஸ்டர் லீவ் முடிந்து கல்லூரிக்கு வந்து விட்டேன் இந்த ஒரு சமயத்தில், யூடியூப் வீடியோக்களில் Meta Tag எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்து airtel tv app பற்றின ஒரு வீடியோ போட்டு இருந்தேன். வீடியோ போட்டு 10 முதல் 15 நாட்கள் வரை எந்த ஒரு மாற்றமும் அதில் நடக்கவில்லை மிஞ்சிப்போனா 30 60 பார்வையாளர்கள் மட்டுமே வந்திருந்தார்கள், ஆனால் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை அந்த மாதம் முடிவிற்குள் ஒரு லட்சம் பார்வையாளர்களை திடீரென தாண்டி விட்டது. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் அடுத்த 4 மாதங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுவிட்டது. ஆனால் எனது கெட்ட நேரம் கூகுள் நிறுவனம் youtube க்கு புதிதாக பத்தாயிரம் பார்வையாளர்கள் இருந்தால் போதும் சம்பாதிக்க விளம்பரங்கள் தரப்படும் என்ற விதிமுறை மாறி 4000 மணி நேரமும் 1000 சப்ஸ்க்ரைபரும் இருக்க வேண்டும் என மாற்றப்பட்டது. ஆகையால் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருந்தும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. எது எப்படியோ 1 மில்லியன் எப்படி அந்த வீடியோவிற்கு வந்தது என்பது இன்று வரை புரியவில்லை. ஆனால் இதனால் கிடைத்த ஊக்கத்தினால் தொடர்ந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்தேன். இப்படியே பைனல் செமஸ்டர் முடிந்து பாண்டிச்சேரி மடுக்கரையில் இருக்கும் tvs நிறுவனத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்தது. ஆனால் என்னமோ தெரியவில்லை என் மனம் முழுக்க யூடிபில் வீடியோக்கள் உருவாக்குவது மட்டுமே நிறைந்திருந்தது. முழுமனதோடு கம்பெனியில் வேலை செய்ய முடியவில்லை, சேர்ந்த ஓரிரு வாரத்திலேயே வேலையை விட்டு நின்று விட்டேன். வீட்டில் பயங்கரமான சண்டை நடந்தது அந்த சண்டைக்கு பதிலாக நான் கொடுத்தது நான் youtube மூலம் சம்பாதிக்க போகிறேன் அதற்கு நாட்களாகும். ஆனால் எனது பெற்றோர்கள் ஏற்கனவே படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை தினமும் என்னை திட்டி தீர்ப்பதும் மாலையில் அப்பா என்னிடம் சண்டையிடுவதும் தொடர்ந்து வண்ணமே இருந்து. இந்த ஒரு சமயத்தில் யூட்யூபில் பணம் எப்படி சம்பாதிப்பது என்று நான் போட்ட ஒரு வீடியோ நல்ல பார்வையாளர்களை சம்பாதித்துக் கொண்டிருந்தது. ஆகையால் மற்ற டாபிக்கை முழுமையாக நிறுத்திவிட்டு யூடியூப் ஐ பற்றி நான் தினமும் கற்றுக் கொள்ளும் விஷயங்களை முழுநேர வீடியோவாக பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தேன். ஒரு சமயத்தில் என் அப்பா என்னை வற்புறுத்தி ஒரு செல்போன் கடையில் வேலைக்கு சேர்த்து விட்டார். அங்கு எனக்கு மிக சௌகரியமாக இருந்தது. youtube இனி வேண்டாம் என்ற எண்ணமெல்லாம் உருவாகியது. ஆனால் ஏனென்று தெரியவில்லை மீண்டும் ஓரிரு வாரத்தில் வேலையை விட்டு நின்றேன். இந்த பிரச்சனையை சமாளிக்க என் பெற்றோர்களிடம் இன்னும் மூன்று மாதத்தில் யூட்யூப்பில் இருந்து நான் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவேன் என்று வாக்குறுதி எல்லாம் கொடுத்தேன். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன பிறகு தான் Youtube Monetization கிடைத்தது. இனி என் பிரச்சனைகள் எல்லாம் முடிந்துவிடும் என்று சந்தோசமாக இருந்தேன். ஆனால் அந்த மாத இறுதியில் தான் புரியவும் வந்தது ஒவ்வொரு மாதமும் 100 டாலருக்கு குறையாமல் சம்பாதித்து இருந்தால் தான் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆகையால் இந்த நூறு டாலரை எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மாங்கு, மாங்கு என்று தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை வீரியமாக தொடர்ந்தேன். ஆனால் என்ன செய்தாலும் கிடைக்கிற கொஞ்சநஞ்ச பார்வையாளர்களை வைத்து ஆறு மாதத்திற்கு பிறகு தான் நூறு டாலரை முதல் முறையாக தாண்டி வங்கிக் கணக்கிற்கு 7 ஆயிரத்தி சில்லறை வந்தடைந்தது. இந்த ஒரு சமயத்தில் எனது மனநிலை எந்த அளவிற்கு சந்தோஷமாக இருந்ததோ அதே அளவிற்கு என் பெற்றோர்களால் வெகுவாக காயமும் அடைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மனதை தேற்றிக்கொண்டு நம்பிக்கையுடன் யூட்யூபில் வீடியோ பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் ஆறு மாதத்திற்கு பிறகு தான் ஒரு 7000மே யூடிபில் இருந்து கிடைத்திருப்பதால் வேறு ஏதாவது வேலையையும் செய்து கொண்டே தான் யூடியூபில் தொடர வேண்டும். மாதம், மாதம் எப்போது யூடியூப்பில் இருந்து குறைந்தபட்சமாக 100 டாலர் கிடைக்கிறதோ அப்போதுதான் முழு நேரமாக யூடியூபில் இறங்க வேண்டும் என்பது புரிய வந்தது. ஆனால் வேலைக்காக எந்த ஒரு முயற்சியும் நான் செய்யவில்லை யூட்யூபை மட்டுமே தொடர்ந்து வந்தேன். ஆனால் நாள் போக்கில் வேலைக்குப் போகியே ஆக வேண்டும் என்று என்னை நானே கட்டாயப்படுத்தும் சூழ்நிலைக்கு ஆளானேன். ஏனென்றால் எனது அப்பா ஒரு முழு நேர குடிகாரனாக மாறி தினம் தினம் சண்டைகளால் வீடு நிறைந்து வழிந்தது. என் அப்பா இல்லாத சமயத்தில் என் அம்மா நான் வேலைக்கு சென்று இருந்தால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்திருக்காது என சொல்லி சொல்லியே தகாத வார்த்தைகளால் காயப்படுத்தவும் ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் என் அப்பா அம்மாவிடம் ஏற்பட்ட கசப்பா அல்லது என்னிடம் ஏற்பட்ட கசப்பா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு குடும்பமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு தனியாக சென்று விட்டார். அவர் வீட்டை விட்டுப் போன அடுத்த 15 நாட்களில் சிலிண்டர், கரண்ட், வீட்டு வாடகை, வீட்டுச் செலவு என என்னையும் என் அம்மா மற்றும் தங்கையை பயமுறுத்தியது. ஆரம்பத்தில் அப்பா நாளை வந்து விடுவார் என்று தான் கணித்தோம் ஆனால் ஒரு வாரமாகியும் வரவில்லை. பயத்தின் உச்சியில் இருந்த நான் தெருத்தெருவாக சென்று எல்லா கடைகளிலும் வேலை கேட்டேன். அது என்னமோ எனக்கு எங்கேயுமே வேலை கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு OLX மூலமாக ஒரு "பாண்டிச்சேரி கிச்சன்" என்னும் ஹோட்டலில் வேலை கிடைத்தது. அந்த ஹோட்டலில் ஒரு வாரம் இருந்திருப்பேன். அங்கு ஏற்கனவே சில மாதமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு சம்பளம் சரியாக தரவில்லை, இதனால் வெளியேறிய சில நபர்களால் தான் எனக்கு அங்கு வேலை கிடைத்து இருக்கிறது என்று தெரியவந்தது. நமக்கும் இதே மாதிரி செய்து விடுவார்களோ என்ற பயத்தில் சேர்ந்த இரண்டு வாரத்தில் அருகில் இருந்த மற்றொரு "கறிசோறு" என்னும் ஹோட்டலில் சமைப்பவர்களுக்கு எடுபடியாக சேர்ந்தேன். என்னுடைய கெட்ட நேரமா என்ன என்று தெரியவில்லை எனக்கு சமைக்கவே தெரியாது இன்னும் தெளிவாக சொல்லப் காய்கறியை வெட்டுவதற்காக கத்தியை எடுத்த போது என் கை நடுக்கத்தில் தான் இருந்தது. அந்த அளவிற்கு எனக்கு பழக்கமே கிடையாது. தினமும் மாலை உடல் முழுக்க வலிகளும் வெங்காயம் மற்றும் பூண்டின் நாற்றத்துடன் வீட்டில் சென்று உறங்கி விடுவேன். இதனைத் தொடர்ந்து சமைப்போர்களிடம் தினம் தினம் திட்டு மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தேன். அதில் அவர்களின் தவறும் கிடையாது, எனக்கு வேலை தெரியாது என்பதால் அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள தாமதமானது. இதனால் ஒரு கட்டத்தில் மாஸ்டருடன் கைகளப்பாக கூடிய ஒரு தருவாயில் கைகளப்பை தவிர்த்து விட்டு சேர்ந்த 15 நாட்களிலேயே ஓனரிடம் சொல்லிவிட்டு நின்று விட்டேன். இந்த 15 நாட்களுக்கான ஏதாவது சம்பளம் தருவார்கள் என்று நான் ஏங்கினேன் ஆனால் இடையில் செல்வதால் அந்தப் 15 நாட்களாக ஓட்டலில் நான் சாப்பிட்டதுக்கு கழிந்தது போல் சொல்லி தர முடியாது என்று ஓனர் மறுத்துவிட்டார். நானும் பரவாயில்லை என்று சொல்லி சிரித்த முகத்துடன் விலகி விட்டேன். இதன் பிறகு மீண்டும் OLX ஆப் மூலம் தேடி மூன்று நாட்கள் கழித்து "The Thickshake Factory" என்னும் சிற்றுண்டி ரெஸ்டாரண்டில் மாஸ்டராக வேலை கிடைத்தது. மொத்தமாக அந்த ரெஸ்டாரண்டில் நான்கு பேர் தான் மூன்று மாஸ்டர்கள் ஒரு மேனேஜர் இரண்டு working shift விகிதம் ஒரு சிப்ட்டுக்கு எட்டு மணி நேரம் வேலை இருக்கும். மாதம் 12 ஆயிரம் சம்பளம். உண்மையில் இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கு இருக்கும் சக வேலை பார்க்கும் விஷ்வா, கிறிஸ்டோபர் முரளி, மற்றும் மேனேஜர் நல்ல நட்பாக பழகினார்கள். ஏதோ வெகு நாட்களுக்குப் பிறகு நான் சிரிப்பது போன்ற எண்ணம் சக வேலையாட்களுடன் பேசி சிரிக்கும் போது தோன்றியது. இங்கு நான் வேலை பார்த்துக் கொண்டே கிடைக்கிற நேரத்தில் youtubeக்கு வீடியோ செய்து பதிவேற்றமும் செய்தேன் கொஞ்சம் கொஞ்சமாக யூட்யூபில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த பணம் 4 மாதத்திலும் மூன்று மாதத்திலும் இரண்டு மாதத்திலும் மற்றும் ஒரு வருடம் கழித்து ஒவ்வொரு மாதமும் வர ஆரம்பித்தது. இந்த ஒரு சமயத்தில் ரெஸ்டாரண்டில் இருந்து மாதம் 12,000 யூட்யூப்பில் இருந்து மாதம் நிலையில்லாத 8,000 அல்லது 10,000 என ஓர் அளவிற்கான பணமும் கிடைத்துக் கொண்டிருந்தது. மற்றும் ஒரு சேனலில் இருந்து பத்தாயிரம் ரூபாய் கிடைக்குதுன்னா இன்னும் ஒரு அஞ்சு சேனல நம்ம ரன் பண்ணா மாதம் 50 ஆயிரம் ரூபாய் கிடைச்சிரும் அப்படி என்ற நம்பிக்கையில் இன்னும் ஒரு சில சேனல்கள் உருவாக்கி அதுக்கான வீடியோவும் அப்லோட் பண்ணிட்டு இருந்தேன். இதில் கேளிக்கை என்னவென்றால் இந்த சேனல்களுக்கான வீடியோக்களை உருவாக்குவதை விட அதை எடிட் செய்வதற்கு தான் நேரம் அதிகமாகியது அதனால் என்கிட்ட இருக்கிற ஒரு அரசாங்க லேப்டாப் பத்தலன்னு இன்னொரு அரசாங்க லேப்டாப் என்னுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா என்னும் நண்பரிடம் இருந்து வாங்கினேன். தொடர்ந்து வீடியோக்களை அப்லோட் செய்து நான் நினைத்ததை சாதிக்க ஒவ்வொரு நாளும் முன்னேறினேன். எனக்கு இருந்த பிரச்சனைகளும் ஏதோ குறைந்து விட்டது போன்று இன் நாட்களில் நிம்மதியாக பிரயாணித்துக் கொண்டிருந்தேன். இந்த சூழ்நிலையில் மாதம் எனக்கு இருபதாயிரம் ரூபாய் கையில் கிடைத்தது. பெரும்பாலாக வீட்டு செலவிற்கு தான் பயன்படுத்தினேன் இதனால் எனக்கென அல்லது யூட்யூபிற்கு தேவைப்படுகிற வேறு எந்த பொருள்களையும் என்னால் வாங்கிக் கொள்ள முடியவில்லை, இது எல்லா ஆண்களின் பிரச்சனையுதான் இருப்பினும் யூடியூபில் வீடியோ உருவாக்க நான் பயன்படுத்திக் கொண்டிருந்த சாம்சங் ஜே5 செல்போனின் கேமரா சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குவாலிட்டி கிடையாது. அந்த சமயத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிற்றுண்டி ரெஸ்டாரண்டில் முரளி என்கிற சக வேலை பார்க்கும் நண்பன் ரியல் மீ ஸ்மார்ட் போன் ஒன்று வாங்கி இருந்தான். அதில் எடுத்த போட்டோக்களை என்னிடம் காட்டினான், மிகவும் தரமாக இருந்தது. அதனால் உருவான ஆசை நானும் இப்படி ஒரு நல்ல குவாலிட்டி கேமரா உள்ள போன் வாங்க முடிவு செய்து அப்போது மிகப் பிரபலமாக அறிமுகப்படுத்தப்பட்ட Realme XT செல்போனை வாங்க முடிவு பண்ணேன். ஆனால் சம்பாதிக்கும் பணத்தை அனைத்தையும் வீட்டில் கொடுப்பதால் என் அம்மாவிடம் சென்று நின்னேன். ஏதோ எனக்கு கடன் தருவது போன்று சலித்துக் கொண்டு பணத்தை தந்தார்கள். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை பின்பு நானும் ரியல் மீ எக்ஸ் டி செல்போனை வாங்கி விட்டேன் ஆனால் அந்த செல்போன் என்னிடம் இருந்தவரை நான் தான் என் மகனுக்கு செல்போன் வாங்கித் தந்தேன் என்று அவ்வப்போது சொல்லுவார்கள். எது எப்படியோ வாங்கிய செல்போனை பயன்படுத்தி தரமான வீடியோக்களை உருவாக்கினேன் சம்பாதித்தேன். வேறு என்ன வேண்டும் இதையே தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம் என்ற சிந்தனை மட்டும் தானே தவிர எதிர்கால சிந்தனைகள் ஏதும் எனக்கு கிடையாது. ஆக மொத்தத்தில் தவறுதலாக நான் எடுத்துப் படித்த DVP course ஆறு வருடத்திற்கு பிறகு யூடியூப் மூலம் பணம் சம்பாதித்துக் கொடுத்தது. இன்று அந்த நாட்களை திரும்பிப் பார்க்கும்போது விதி முடிவு செய்த பாதையில் தான் இந்த நிகழ்வுகள் நடந்திருக்கிறது "நடப்பவை யாவும் நன்மைக்கே" என்பது புரிகிறது.
கலைஞனாக உருவெடுத்த நாள்:
வருமானப் பிரச்சினையால் என்ன செய்வது எங்கு போவது என்று தவித்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் ஒரு நாள் மாலைப் பொழுதில் ஏதாச்சியாக ஹாலில் அமர்ந்திருந்தேன். என் தங்கை டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் டிவியை தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் தெளிவாக சொல்லப் போனால் என் கண்கள் மட்டுமே டிவியை பார்த்துக் கொண்டிருந்தது மனசு முழுக்க "இருக்கிற காசு பத்தலையே" என்ன பண்றது? என்ற கவலை தான் நினைவாக நிறைந்து இருந்தது. திடீரென ஏதோ ஒரு பாடல் என்னை நினைவிற்கு கொண்டு வந்தது. அந்தப் பாடல் தான் "Run Away" நார்வே நாட்டை சேர்ந்த Aurora` என்கிற பதினோரு வயது சிறுமியால் உருவாக்கப்பட்ட பாடல் என்னை மெய் மறக்க செய்து, அவளின் பாடலுக்குள் மூழ்கடித்தால். என்னால் இன்றும் நம்ப முடியவில்லை, அந்தப் பாடலின் ஒவ்வொரு சத்தமும் என் மனதில் எதிரொலித்தது எனக்கு அவள் என்ன பாடுகிறாள் என்பது புரியவில்லை, ஏனென்றால் அந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அந்த பாடல் எழுப்புகிற சத்தம் என் மனதோடு பேசியது. டிவியில் ஒரு முறை தான் கேட்டேன் இதன் பிறகு யூட்யூபில் அன்று இரவு முழுக்க திரும்பத், திரும்ப இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். தூக்கம் வருவதற்கு முன் நானும் இசைக்கலைஞன் ஆக வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. மறுநாள் அதற்கான முதல் கட்ட முயற்சியாக யூடியூபில் எப்படி பாடல்களை உருவாக்குவது என்று தேடினேன். எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது முறையாக நான் இசை கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் யூட்யூபில் யூட்யூபர்கள் சொல்லிக் கொடுக்கக்கூடிய பாடங்கள் கண்டிப்பாக கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தேடல் வேட்டையை ஆரம்பித்தேன். அப்படித்தான் எனக்கு ஒரு சில சாப்ட்வேர்கள் மற்றும் எப்படி பாட வேண்டும் என்ற விளக்கங்கள் கிடைத்தது. இதைத் தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கவும் ஆரம்பித்தேன். அந்த வகையில் ஆரம்ப கட்டத்தில் youtube இல் இருந்து அயல்நாட்டு பாடலுக்கான karaoke எடுத்து ஒரிஜினல் பாடலின் மெட்டிலையே வார்த்தைகளை மட்டும் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் வேறு ஒரு கதையை சொல்லும் வகையில் எழுதி பாடி ரெகார்ட் செய்ய ஆரம்பித்தேன்.
இந்த அனுபவம் மெட்டு என்றால் என்ன, லிரிக்ஸ் எப்படி எழுதுவது, எப்படி பாடுவது என்ற முன்னுரையை அனுபவமாக தந்தது. ஆனால் இப்படி நான் ரெக்கார்ட் செய்து அதை வீடியோ சாங்காகவும் யூடியூபில் பதிவேற்றம் செய்தேன். பெரிதாக கவர் சாங் செய்வதில் இருக்கும் சிக்கல்கள் தெரியாததால் நான் அப்லோட் செய்த பாடல்கள் அனைத்தும் காப்பிரைட் கிளைம் செய்யப்பட்டது. ஏன் என்று பார்க்கும் போது தான் இதில் இருக்கும் பிரச்சனைகள் தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து நாமே பாடலை உருவாக்கினால் தான் சம்பாதிக்க பயன்படுத்த முடியும் என புரிந்தது. அந்த சமயத்தில் என்னிடம் அரசாங்கத்தால் கொடுத்த லேப்டாப் மற்றும் ஒரு ஐந்தாயிரம் ரூபாய்க்கு மிடி கீபோர்டு Play பண்ணவே தெரியாது என்றாலும் ப்ரோக்ராமிங்க்கு உதவும் என்ற காரணத்தினால் வாங்கியிருந்தேன், இது போக 3000 ரூபாய்க்கு ஒரு USB Mic வாங்கி இருந்தேன். இதை பயன்படுத்தி யூடியூபில் பார்த்து பார்த்து சின்ன சின்ன Beat போட ஆரம்பித்தேன். அப்படி நான் உருவாக்கிய முதல் பாடல் தான் "அன்பே"
எல்லா இசைக் கலைஞர்களும் குறிப்பாக குரு இல்லாமல் தன்னிச்சையாக என்னைப் போன்று கற்றுக் கொள்ளும் நபர்கள் தங்களது குறையை கண்டுபிடிக்கவே வருட கணக்காகும் பின்பு அந்த குறையை சரி செய்ய இன்னும் வருடக்கணக்காகும். நண்பர்களும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நாம் உருவாக்கிய பாடல்களை கேட்டு விட்டு நல்லா இருக்கு என்று சொல்லுவார்கள். ஆனால் அது உண்மை இல்லை என்பதற்கான சாட்சி தான் யூடியூபில் அந்தப் பாட்டுக்கு எந்த ஒரு பார்வையாளர்களும் வராமல் இருப்பது. தங்களது பாடலில் என்ன பிரச்சனை இருக்கிறது ஏன் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை யாரும் தேடி வந்து பார்க்க விரும்பவில்லை என்பதை ஆராய ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நாட்கள் ஆகும் எனக்கும் சில நாட்கள் ஆனது கிட்டத்தட்ட ஆறு மாதமாக இனி ரெஸ்டாரண்டில் வேலையை செய்ய வேண்டாம் யூடியூபில் வேலை செய்து கொண்டே பாடல்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குவோம் என்ற முடிவிற்கு வந்தேன். ஆனால் அப்ப கூட உலகம் முழுவதும் Lockdown இருந்தது இதுவும் எனக்கு சாதகமாக மாறியது அந்த சமயத்தில் எக்கச்சக்கமான online courses குறைந்த விலையில் கிடைத்தது ஆனால் எல்லாம் தரமானது கிடையாது அப்படி நான் ஏமார்ந்த சில online course-களும் உண்டு. இருப்பினும் முதல் முதலில் பாடுவது எப்படி என்ற வட இந்திய பாடகர் ஷான் celebrity school என்னும் இணையதளத்தில் வழங்கி இருந்தார். முதல் முதலில் பாடகர்களின் பின்னணி பயிற்சி என்ன என்பது இந்த course மூலம் தெரிந்து கொண்டு நானும் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன் தினமும் காலை இரண்டு மணி நேரம் ஹிந்துஸ்தானி சங்கீத முறைப்படி ரியாஸ் செய்ய ஆரம்பித்தேன் ஓரிரு வாரங்களில் எனது குரலில் மாற்றம் ஏற்பட்டது என்னால் சுலபமாக மெட்டில் பாட முடிந்தது. இதுபோக யூடியூப்பில் மியூசிக் ப்ரோக்ராம் பற்றின நிறைய வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன் ஆனால் எனது துரதிஷ்டம் அந்த சாப்ட்வேரை பயன்படுத்த வேண்டும் என்றால் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட லேப்டாப் எனக்கு பத்தாது கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கும் லேப்டாப் வாங்க வேண்டும். ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையில் யூட்யூப்பில் இருந்து வரும் பணமே எனக்கு பத்தல இருந்தாலும் அதில் சேர்த்து வைத்து லேப்டாப் வாங்கிவிடலாம் என்று சிறுக சிறுக சேர்க்கவும் ஆரம்பித்தேன் கிட்டத்தட்ட ஒரு வருடமே கடந்து போனது ஒரு வழியாக Lockdown முடிவுக்கு வந்தது ஆனால் லேப்டாப் வாங்கும் அளவிற்கு பணம் சேரவே இல்லை ஆகையால் EMI மூலம் லேப்டாப் வாங்குவதற்கு முயற்சி செய்தேன் எனது துருஷ்டம் என்னுடைய வேலை மற்றும் வயது பத்தவில்லை இருந்தாலும் கொடுத்த லேப்டாப்பில் ஏதாவது செய்ய முடியுமா என்ற முயற்சி மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. குரலை ஓரளவு பலப்படுத்தி பாடக் கற்றுக் கொண்டேன் என்ற நம்பிக்கை வந்த பிறகு இரண்டு பாடல்களை உருவாக்கினேன் ஒன்று EX Love உண்மையில் இந்தப் பாடல் விபத்தாக நான் உருவாக்கியது தான். ஏனென்றால் அப்போது யூடியூபில் புகழ்பெற்ற யூடியூப் மதன் கௌரி ஒரு பாடலை வெளியிட்டிருந்தார் எனக்கு அந்த பாடல் பிடிக்கவில்லை என்றாலும் அதன் காட்சி கவரும் வண்ணம் இருந்தது ஆகையால் அந்தக் காட்சிக்கு பாடல் உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று உருவாக்கிய ஒரு நிமிட பாடல் தான் Ex Love
பிறகு இரண்டாவதாக வெறும் arpeggio-வை வைத்து கனவா நிஜமா என்ற இரு வார்த்தைகளை மெட்டாக உருவாக்க முயற்சி செய்து ஒரு முழு பாடலாக மாற்றி youtube இல் வீடியோ சாங்காக வெளியிட்டேன். வழக்கம்போல் இந்த பாடல் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என்றுதான் நம்பினேன். ஆனால் நடப்பது யாதும் நம் கையில் இல்லை முயற்சி செய்வது மட்டுமே நம் கையில் உள்ளவை என்று புரிய வைத்தது.
ஒவ்வொரு நாளும் இசைக்கு மிக நெருக்கமாக பிரயாணித்துக் கொண்டிருந்தேன் இந்த ஒரு தருணம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கலைஞனாக உருவெடுக்க வைத்தது. விதியின் விளையாட்டு என்று எனக்குத் தெரியவில்லை இந்த சமயத்தில் குடும்பமே வேண்டாம் என்று வீட்டை விட்டுப் போன எனது அப்பா மீண்டும் வீட்டிற்கு வந்தார் என் அம்மாவிடம் பேசி சமாதானப்படுத்தினார் பாண்டிச்சேரியில் இருந்து மதுரையில் உள்ள எங்களது சொந்த வீட்டிற்கு வந்தோம். என்னை சமாளிப்பதற்காக எனக்கு ஒரு லட்ச ரூபா செலவு பண்ணி ஒரு லேப்டாப் வாங்கி தந்தார். இதன் பிறகு தான் நான் ஒரு திட்டம் தீட்டினேன் யூட்யூபை வைத்து பணம் எப்படி சம்பாதிப்பது என்பதை அனுபவபூர்வமாக கடந்த சில வருடங்கள் கற்றுத் தந்து விட்டது அதை இசைக்காக பயன்படுத்தி முழு நேரமாக இறங்க வேண்டும் என்பது எனது இலக்கானது. நான் என்ன யோசித்தேன் என்றால் என்னுடைய சேனலில் ஒரு பாடலை எப்படி உருவாக்குகிறேன் என்பதை வீடியோவாக போடுவோம் அந்த வீடியோவை நமக்கு மார்க்கெட்டிங் ஆக உதவும் பின்பு அந்தப் பாடலை வெளியிட்டால் மக்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் ஒரு Production Channel ஆரம்பித்தேன். அதான் அப்பா வந்து விட்டார் அல்ல இனி வீட்டு செலவை அவர் பாத்துக்குவார் என்ற நம்பிக்கையில் EMI மூலம் focusrite scarlett 2i2 3rd gen interface மற்றும் AKG Mic ஒன்று வாங்கினேன். இது எல்லாம் பயன்படுத்தி ஓரளவிற்கு குவாலிட்டி உடன் ஒரு பாடலை உருவாக்கினேன் அதுதான் "கோவக்கார கிளியே".
இந்த ஒரு சமயத்தில் நான் Vs Professional Group மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேறு சில சேனல்களும் வைத்திருந்தேன் அந்த சேனல்களில் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வீடியோ போட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நேரம் ஒதுக்கி வேலை செய்தேன். ஏனென்றால் கிட்டத்தட்ட நான்கு சேனலுக்கு monetization கிடைத்துவிட்டது. monetization கிடைத்த சேனல் ஆறு மாதத்திற்கு மேலாக வீடியோ எதுவும் போடவில்லை என்றால் monetization ரத்து செய்யப்படும். அதை தவிர்க்கவும் கிடைக்கும் பணத்தை அதிகரிக்கவும் வீடியோக்கள் உருவாக்குவதை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தேன். ஆனால் நாட்கள் போக போக ஏதோ ஒன்றுக்கும் மேற்பட்ட சேனலில் நேரங்களை செலவு செய்வதால் இசைக்காக நான் உருவாக்கிய Production சேனலில் எந்த ஒரு வீடியோவும் போட முடியவில்லை என்ற வருத்தம் உருவாக ஆரம்பித்தது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ஒரு நாய் ஒரே சமயத்தில் இரண்டு முயல்களை துரத்தினால் எதுவுமே கிடைக்காது என்ற வார்த்தை மனதிற்குள் எதிரொலிக்க ஆரம்பித்தது. ஆகையால் போகப் போக சேனல்களை விற்க முயன்றேன் அந்த வகையில் மீண்டும் விதியின் முடிவாய் என்று எனக்குத் தெரியவில்லை நான் வைத்திருந்த மற்ற சேனல்களை யாரும் வாங்க முன்வரவில்லை ஆனால் மெயின் சேனல் ஆன Vs Professional Group ஒரு நபர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு கேட்டார். எனக்கும் அந்த சமயத்தில் Fl Studio சாப்ட்வேர் வாங்க பணம் தேவைப்பட்டது ஆகையால் ஆழமான யோசனைக்கு பிறகு Vs Professional Group சேனலை விற்று அந்தப் பணத்தில் எனது முதல் DAW சாஃப்ட்வேரை வாங்கினேன். என்னதான் இப்போது ஓரளவிற்கு எல்லாம் இருந்தாலும் என்னமோ தெரியவில்லை என்னால் ஒரு பாடலைக் கூட உருவாக்க முடியவில்லை அதற்கு முக்கிய காரணம் எனது காது நன்றாக பரிணாமம் அடைந்து விட்டது. நான் உருவாக்கும் மியூசிக் என்ன குறை நான் பாடிய குரல் ஏன் இவ்வளவு Mad ஆக இருக்கிறது இன்னும் பல விஷயங்கள் எனக்கு தெளிவாக தெரிய ஆரம்பித்தனர் அதனால் குறைகளுடன் இருந்த எந்த ஒரு பாடலையும் என்னால் முடிக்க முடியவில்லை. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் அந்தக் குறைகளை சரி செய்யும் முயற்சியில் திரும்பத் திரும்ப அந்தப் பாடலைக் கேட்டு பாடி பாடி கொஞ்சம் கொஞ்சமாக சகிக்க ஆரம்பித்து வேறு ஒரு பாடலை உருவாக்கலாம் என்று நாட்களை வீணடிக்க ஆரம்பித்தேன். உங்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வாரமாக நான் ஒரு பாடலில் வேலை செய்து கொண்டிருப்பேன் அதை மீண்டும் மீண்டும் கேட்பதால் நல்லா இல்ல என்ற எண்ணம் சகிப்பால் உருவாகி வேறொரு பாடலை உருவாக்க அடுத்த வாரம் இறங்கி விடுவேன் அப்போ போன வாரம் உருவாக்கிய பாடல் கிடப்பில் கிடக்கும் இப்படியே நாட்களை வீணடிக்க ஆரம்பித்தேன்.விளைவு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இப்படியே கடந்து போனது.
![]() |
| 2025 Deepavali celebration with Tech Boss Team |
அதனால் கண்டிப்பாக ஏதாவது ஒரு வேலைக்கு போய் கொண்டே மியூசிக்கல் தொடரலாம் என்று முடிவு செய்தேன். அதன் விளைவாக கரூரில் இருக்கிற திண்டுக்கல் தலப்பாக்கட்டு ஹோட்டலில் சர்வெண்டாக வேலைக்கு சேர்ந்தேன். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறினார்கள். அங்கேயே தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் வசதி இருந்தது. கண்டிப்பாக அங்கு தனியறை கிடையாது அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் அனைவரும் ஒரு பெரிய ஹாலில் படுத்துக்கொள்வார்கள். ஆகையால் என்னால் youtubeற்கு எந்த ஒரு வீடியோவும் உருவாக்க முடியாது என்று புரிந்தது. எனக்கு வேலையையும் பார்த்துக் கொண்டே youtubeக்கு வீடியோவும் உருவாக்க வேண்டும். பேசாமல் ஒரு மாதம் கழித்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு தனியாக ஒரு அறை எடுத்து நான் நினைப்பதை செய்யலாம் என்று யோசித்தேன். ஏனோ தெரியவில்லை என் மனம் ஒரு நாளுக்கு மேல் தாக்குப் பிடிக்கவில்லை ஆகையால் மறுநாளே வேலையை விட்டு வெளியேறினேன். இதன் பிறகு வீட்டின் அருகிலேயே ஏதாவது வேலை தேட வேண்டும் என யோசித்து அமேசான், பிளிப்கார்ட் மற்றும் இதர பொருள்களை கொரியர் ஆக வருவதை ஒரு குடோனில் கணக்கிட்டு மீண்டும் அந்தந்த ஊருக்கு ஏற்றி விடக்கூடிய delivery courier நிறுவனத்தில் picker ஆக வேலைக்கு சேர்ந்தேன் மாதம் 12,000 இன்சென்டிவ் என்ற பெயரில் மூன்றாயிரம் கிடைக்கும் ஆக மொத்தத்தில் 15,000 சுவையாக கிடைக்கும் வீட்டிலிருந்து வெறும் எட்டு கிலோமீட்டரில் இந்த குடோன் இருக்கிறது. தினமும் 8 மணி நேரம்தான் வேலை ஆகையால் ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம் அங்கு வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து youtube மற்றும் மியூசிக் சம்பந்தமான எனது வேலையை தொடரலாம் என்று யோசித்து சேர்ந்தேன். மீண்டும் எனது துரதிஷ்டம் முதல் முறையாக எடை அதிகமாக இருக்கும் பழுக்களை தூக்குவதால் ஒரே வாரத்தில் எனது கை வீங்கி விட்டது. அதன் விளைவாக சொல்லிக் கொள்ளாமல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்து விட்டேன். எல்லோருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை உண்டு ஆனால் அது சனி ஞாயிறு கிடைக்காது ஏனென்றால் அந்த சமயத்தில் தான் அதிகமான பொருட்கள் அந்த குடோனுக்கு வரும் அது தெரிந்திருந்தும் நான் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்தது எனது மேலதிகாரிகளுக்கு கோபத்தை உருவாக்கியது விளைவு வேலையை விட்டு நின்று விட சொன்னார்கள். நான் எவ்வளவோ பேசிப் பார்த்தேன் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை ஆகையால் இந்த ஒரு மாதம் மட்டும் நான் வேலை பார்க்கிறேன் அடுத்த மாதத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று விண்ணப்பித்தேன் அதற்கு சம்மதித்தார்கள். அந்த மாதம் மட்டும் அங்கு வேலை பார்த்துவிட்டு. மீண்டும் பழைய படிய வீட்டில் யூ டூப் மற்றும் மியூசிக் சம்பந்தமான வேலையை தொடர்ந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் யூடியூப்பில் இருந்து பணம் கிடைப்பது குறைந்து விட்டது. காரணம் மெயின் சேனலை நான் விற்று விட்டதால் மாதம் 100 டாலர் என்ற கட்டாயத்தை என்னால் தாண்ட முடியவில்லை ஆகையால் youtube எனக்கு எந்த ஒரு பணமும் தராத சில மாதங்களும் கடந்தன. வீட்டில் மீண்டும் பிரச்சனை ஆரம்பித்தது. அந்த ஒரு சமயத்தில் தான் Tech Boss என்னும் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் டேக் சேனலின் உரிமையாளர் திரு விஜய் கார்த்திகேயன் அவர்களின் ஒரு வீடியோ Adada Creators சேனலில் இருந்து என் கண்ணில் தட்டப்பட்டது அது என்னவென்றால் என்னைப் போன்று ஏதோ ஒரு youtube சேனல் ஐடியா உடன் இருக்கும் நபர்கள் Adada Creators-ஐ தொடர்பு கொண்டால் அந்த ஐடியா நல்லா இருக்கும் பட்சத்தில் அதற்கான முதலீடு அல்லது பொருள் ரீதியான உதவிகள் செய்து working partner ஆக்கிக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தார் இதனைத் தொடர்ந்து அவரை தொடர்பு கொண்டு இந்த மாதிரி நான் ஒரு மியூசிக் சேனல் உருவாக்க விரும்புகிறேன். முதலீடு இல்லாத காரணத்தினால் என்னால் எந்த ஒரு மேற்கட்ட வேலைகளிலும் இறங்க முடியவில்லை உங்களால் முதலீடு செய்ய முடியுமா என்று நேரில் சென்று சந்தித்து பேசினேன். விஜய் கார்த்திகேயன் மற்றும் அவரது டீமுக்கும் இது எப்படி சாத்தியம் ஒரு தனிநபராக பாடல்களை உருவாக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது அதனால் அவர்களிடம் 15 days முதல் ஒரு மாதம் அவகாசம் கேட்டு அவர்களது ஆஃபீஸிலேயே தங்கி ஒரு தனி அறையில் ஒரு பாடலை உருவாக்கினேன் இந்த முறை நல்லா இருக்குதோ இல்லையோ நம்மால் என்ன முடியும் என்பதை காட்டும் வகையில் ஒரு பாடலை உருவாக்கி விடுவோம் என்ற எண்ணத்தில் "யாரோ" என்கிற பெயரில் ஒரு பாடலை உருவாக்கினேன்.
இந்த பாடல் விஜய் கார்த்திகேயன் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் ஆச்சரியமும் பட்டார் எப்படி ஒரு அறையில் இருந்து பாடலை உருவாக்க முடியுமா என்று வியந்தார் ஏனென்றால் அவருக்கு நவீன உலகத்தின் பாடல் தயாரிப்பு எப்படி என்பது தெரியாது. பின்பு விஜய் கார்த்திகேயன் நான் முதலீடு செய்வதற்கு தயார் ஆனால் அதற்கு நீங்கள் முதல் கட்ட வேலைகளை செய்ய ஆரம்பிங்கள் என்று கூறினார். இதன் அர்த்தம் ப்ரொடக்ஷன் சேனலுக்கான ஆரம்பகட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்ய ஆரம்பிங்கள். அதை பார்த்துவிட்டு எங்களால் முடிந்த முதலீடுகளை செய்கிறோம் மற்றும் அதுவரை மாதம் குறைந்தபட்ச சம்பளமாக 8000 தர ஒத்துக் கொண்டார். நாள் போக்கில் நான் அந்த ஆபீஸ்லையே தங்கி அங்கேயே சாப்பிட்டுக் கொண்டு அடுத்த பாடலை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கினேன். இந்த மாதிரியான ஒரு சமயத்தில்தான் ஏன் ஒரு Artist Channel Or Music Production சேனலை உருவாக்க வேண்டும் பேசாமல் Music Lable சேனலையே உருவாக்கி விடலாமே என்ற எண்ணம் உருவாகியது. முக்கிய காரணம் வட இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மியூசிக் லேபிளுக்கு எதிரான கலைஞர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் அவர்களால் கொடுக்கப்பட்ட சில நேரலைகள் மூலம் என்னென்ன பிரச்சனை இசைத்துறையில் இருக்கிறது ஏன் மியூசிக் லேபிள் புறக்கணிக்கப்படுகிறது என்பது புரிந்தது ஒரு வேலை அந்த பிரச்சனையை சரி செய்து விட்டால் அந்த ஒரு மியூசிக் லேபிள் கலைஞர்களால் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கை எனக் உருவானது இதைப் பற்றி இன்னும் நிறைய தகவல்களை ஒன்று திரட்டினேன் எப்படி ஒரு மியூசிக் லேபிள் ஆரம்பிப்பது என்பதை கற்றுத் தேர்ந்தேன், குறிப்பாக சினிமாவை விட்டா வேற வழி இல்லை என்ற எண்ணங்களில் இருக்கும் கலைஞர்களுக்கு ஒரு தனி மேடையை நான் உருவாக்கப் போகும் மியூசிக் லேபிள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். இது வெறும் தொழிலாக இல்லாமல் ஒரு புரட்சியாக மாற வேண்டும் என்று முடிவு செய்தேன் அதை விஜய் கார்த்திகேயன் அவர்களிடமும் கூறினேன். அவரும் உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க அப்படிங்கற சுதந்திரத்தை கொடுத்தார். ஆனால் எனது துரதிஷ்டம் மியூசிக் லேபிள் சேனல் ஐடியா இருந்தா மட்டும் போதாது அங்கு அப்லோட் செய்வதற்கு பாடல்களும் வேண்டும் கிட்டத்தட்ட நான்கு மாதமாக முயற்சி செய்தும் மீண்டும் மீண்டும் எனது பாடல் எனக்கே பிடிக்காம போய் ஒரு பாடலை கூட உருப்படியாக முடிக்க முடியவில்லை. இந்த ஒரு சமயத்தில் Adada Creators ஆபீஸில் இருக்கும் மற்ற நபர்களுக்கு என்னால் பாடல்களை உருவாக்க முடியாது என்ற எண்ணம் உருவாகி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இந்த மாதிரியான ஒரு சமயத்தில்தான் விஜய் கார்த்திகேயன் ஒரு மசாலா கம்பெனி ஆரம்பிக்க நினைத்தார் அந்த நிறுவனத்தின் பெயர் "Malthani" இந்த நிறுவனத்தின் மசாலாவை விளம்பரம் செய்வதற்காக ஏதாவது பாடல் உருவாக்க முடியுமா என்று என்னிடம் கேட்டார். எனக்கும் வேறு வழி இல்லை அவரே கேட்கும் போது மறுக்காமல் முடியும் என்று ஒத்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்களில் ஒரு பாடலை இசை இன்றி சும்மா லிரிக்ஸ் மட்டும் எழுதி மெட்டு போட்டு பாடி ஆடியோவாக அனுப்பினேன். என்ன மாயமோ தெரியவில்லை விஜய கார்த்திகேயன் மற்றும் ஆபீஸில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்து விட்டது இதை பாடலாக உருவாக்குங்கள் என்று கூறினார் அப்படி நான் உருவாக்கிய பாடல் தான் "கமகம".
இந்தப் பாடல் அனைவருக்கும் பிடித்துப் போக ஆஃபீஸில் இருந்த அனைவரும் ஒரு கலைஞனாக பார்ப்பது போல் உணர்ந்தேன். இந்த ஒரு சமயத்தில் முழு நேரத்தையும் இசைக்கனவே ஒதுக்கி நான் நினைத்த Music Lable Channel உருவாக்க முடிவு செய்தேன் இருப்பினும் என் மனதிற்குள் அவ்வப்போது நான் வைத்திருந்த மற்ற சில சேனல்களில் தற்போது வீடியோவை போடாமல் இருக்கிறோமே என்ற எண்ணம் வந்த வண்ணமே இருந்தது. அந்த சமயத்தில் தான் பிக் பாஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் எனது சக நண்பர்கள் youtubeல் ஏதாவது வீடியோ போட்டு முன்னேறனும் என்ற எண்ணம் அடி மனதில் இருந்திருக்கிறது நான் ஒரு நாள் டீக்கடையில் இருக்கும் போது இந்த மாதிரி சில சேனல் நான் இப்பயும் வைத்திருக்கிறனால Music Lable Channel ல கவனம் செலுத்த முடியல அதனால டெலிட் பண்ண போறேன் அப்படின்னு சொன்னேன் அதுக்கு ஆனந்த், மற்றும் சங்கர் ஆகிய இருவரும் டெலிட் பண்றதுக்கு பதிலா எனக்கு கொடுத்துடுங்க நாங்களாவது வீடியோ போட்டுக்குறோம் அப்படின்னு சொன்னாங்க அதனால ஒரே வாரத்துல அவங்க ஈமெயிலுக்கு இரண்டு சேனல மாத்தி விட்டேன் இதுக்கு எந்த ஒரு பணமும் நான் வாங்கல. இவங்க ரெண்டு பேரும் வாங்கிய கேள்விப்பட்டு ஸ்டீபன்ற மற்றொரு நண்பர் அவரும் எனக்கு ஒரு சேனல் தர முடியுமா எனக் கேட்டார் கடைசியாக நான் வைத்திருந்தேன் சேனலையும் அவருக்கு கொடுத்து விட்டேன். பின்னர் எனது google adsense கணக்கை முழுமையாக மூடிவிட்டேன். இனி எனக்கு இருக்கும் ஒரே இலக்கு Music Lable துறையில் வெற்றி அடைவது தான். ஆனால் நான் எதிர்பார்க்கவில்லை மீண்டும் சாம்பார் மசாலாவுக்கு ஒரு பாடலையும் உருவாக்குமாறு விஜய் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்கு மியூசிக் லேபிள் காண வேலையை தான் செய்யணும் என்ற என்ன ஆரஞ்சு அதனால விஜய் கார்த்திகேயனின் சாம்பார் மசாலா பாடலுக்கு மறுப்பு சொல்லாமல் என்னோட லேப்டாப் சரியில்ல, என்கிட்ட இருக்கிற ஸ்பீக்கர் ஹெட் போன் பத்தல அப்படின்னு சாக்கு போக்கு சொல்லி தவிர்க்க முயற்சி செய்தேன். ஆனா விஜய் கார்த்திகேயன் ஒன்னும் பிரச்சனை இல்ல, நீ என்ன எல்லாம் பிரச்சனை என்று சொல்றியா எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். சலவை நான் ஏத்துக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டாரு. நானும் புது equipments வருகின்ற ஆசையில இரண்டாவது song செய்ய ஒத்துக்கிட்டேன். ஆரம்ப கட்ட முதலீடாக விஜய் கார்த்திகேயன் எனது லேப்டாப்புக்கு SSD மற்றும் RAM upgrade செய்து தந்தார், Arturia KeyLab Essential 49 கீ போர்டு, Audio-Technica Ath-M50X And Beyerdynamic DT 900 PRO X வாங்கித் தந்தார். ஆகையால் என்னால் இதற்கும் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என்னுடைய பாடல் எனக்கே பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கேட்டதை செய்து கொடுத்து விடுவோம் என்ற எண்ணத்தில் மீண்டும் ஒரு பாடலை உருவாக்கினேன் அதுதான் "அறுசுவையின் அறையில்".
இதனைத் தொடர்ந்து சிக்கன் மசாலாவுக்கு தனி பாடலும் மட்டன் மசாலாவுக்கு தனி பாடலும் உருவாக்கி தர சொன்னார் இந்த முறை நான் மறுத்து விட்டேன் ஏனெனில் எனக்கென்னமோ இந்த ஒரு விஷயத்திற்கு செலவு செய்யும் நேரத்தை லேபிள் சேனலுக்காக பாடல்களை உருவாக்க செலவு செய்தால் நல்லது என்று தோன்றியது. அதை அவரிடம் கூறி ஆறு மாதத்திற்கு என்னை என் போக்கில் விட்டு விடுமாறு சொன்னேன் ஆறு மாதத்திற்கு பிறகு வேண்டுமானால் நீங்கள் கேட்கும் வகையில் உங்கள் நிறுவனத்திற்கு பாடல்களை செய்து தருகிறேன் இந்த ஆறு மாதம் முழுக்க முழுக்க நமது மியூசிக் லேபிளுக்காக நான் பாடல்களை உருவாக்கப் போகிறேன் என்று சொன்னேன் அவரும் முழு மனதோடு சரி எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் தந்த இந்த இரண்டு பாட்டை தற்போதைக்கு போதுமானது ஆறு மாதத்திற்கு பிறகு வேண நாங்கள் கேட்ட மற்ற பாடல்களை செஞ்சு தாங்க என்று சொன்னார். ஆனால் எனது துரதஷ்டம் அந்த ஆறு மாதமும் நான் ஒரே ஒரு பாடலில் தான் வேலை செய்தேன் இந்தப் பாடலில் எந்த காரணத்திற்காகவும் எனது சகிப்பால் விட்டு விடக்கூடாது என்று தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருந்தேன் அந்தப் பாடல் தான் "காதலியே"
ஆனால் எனது போதாத காலம் இந்தப் பாடல் ஒன்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்கப்படாது என்பது வெளியிடுவதற்கு முன்னதே தெரிந்தது. அதை விஜய் கார்த்திகேயனும் உணர்ந்தார். இது மட்டுமின்றி விஜய் கார்த்திகேயன் அவரது யூடியூப் தொழில் முந்தைய டீம் வெளியேறியதால் சில நஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டது. இந்த நஷ்டம் நான் சேர்ந்த ஒரு வருடமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கிறது. விஜய் கார்த்திகேயன் ஆரம்ப கட்டத்தில் நான் ஏதாவது செய்வேன் என்று நம்பி இருந்திருக்கிறார், மியூசிக் சம்பந்தப்பட்ட ஒரு புது பிசினஸில் இறங்கலாம் என்று தான் யோசித்து இருந்திருக்கிறார். ஆனால் ஒரு வருடமாகியும் என்னால் எந்த ஒரு முன்னேற்றமும் காட்ட முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் நஷ்டத்தில் இருந்த விஜய் கார்த்திகேயன் என்னிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி நீங்கள் இன்னும் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது அந்த கற்றலுக்கு அது சம்பந்தமான இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஸ்டுடியோவில் வேலை தேடுங்கள் நீங்கள் வேலை தேடும் வரை நான் உங்களுக்கு சம்பளமும் தரத் தயார் என்று அவரால் முடிந்த உதவியை எனக்கு செய்ய உறுதி அளித்தார். எனக்கும் அதுதான் சரின்னு பட்டது என்னால் ஒரு பாடலைக் கூட உருப்படியாக செய்ய முடியவில்லை ஆகையால் ஏதாவது ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்தால்தான் அங்கு கிடைக்கிற அனுபவம் ஒரு பாடலை உருவாக்குவதற்கான திறனையும், அறிவையும், எனக்கு சம்பாதித்து தரும் எனப் புரிந்து. ஆனால் என் மனதிற்குள் என்னை எல்லாம் யார் ஸ்டுடியோவில் வேலைக்கு எடுத்துக் கொள்வார், பெரிய பெரிய படிப்பு படித்தவர்கள் மட்டுமே அங்குலாம் அனுமதிக்கப்படுவார்கள், ஆகையால் Music Mixing and Mastering இன்னும் நன்றாக கற்றுக்கொண்டு அதை freelance வேலையாக செய்யலாம் முதல் ஆர்டர் கிடைக்கும் வரை tech boss ஆபீஸ்லயே தங்கிக் கொள்ளலாம் இன்று முடிவு செய்து மறுநாள் என்னை Mixing and Masteringக்கு என்னை ட்ரெயின் செய்வதற்காக மதுரையில் உள்ள சில ஸ்டுடியோக்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு அவர்களிடம் இருக்கும் பழைய Music ப்ராஜெக்ட் stems பணத்திற்கு கேட்டேன். அப்படிதான் மதுரையில் உள்ள சவுண்ட் மேக்ஸ் ரெக்கார்ட் எனும் ஸ்டூடியோவின் உரிமையாளர் நிரஞ்சன் ஜெரி அப்பாயின்மென்ட் கொடுத்தார். உண்மையில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதற்கான காரணம் Stems வாங்குவதற்கு மட்டும் தான் ஆனால் அங்கு அரை மணி நேரத்தில் எங்களுக்குள் நடந்த கலந்துரையாடல் என்னைப் பற்றி அவர் தெரிந்து கொண்டது அவர் வாயிலிருந்து இங்கு வேலை பார்க்கிறாயா? எனக் விதி கேட்க வைத்தது. நானும் சம்மதித்தேன். தற்போது சவுண்ட் மேக்ஸ் ஸ்டுடியோவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கும் மேலாகிறது ஆனால் Internship அடிப்படையில் சேர்ந்ததால் ஆரம்பகட்ட இரண்டு மூன்று மாதங்கள் சம்பளமே கிடையாது அந்த சமயத்தில் விஜய் கார்த்திகேயன் எனக்கு தங்குவதற்கு இடமும், வேலையே செய்யவில்லை என்றாலும் மாதம் 10,000 சம்பளமும், போக்குவரத்துக்கு அவருடைய இருசக்கர வாகனமும் தந்தார். உண்மையிலேயே என் வாழ்க்கையில் சந்தித்த ஒரு நல்ல மனிதன் ஆனால் என்னால் தான் அவருக்கு எந்த ஊரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது. அதை எண்ணி நான் பலமுறை வருத்தப்பட்டு இருக்கிறேன். ஆனால் முந்தைய அனுபவங்களில் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் தான் நடப்பவை யாவும் நன்மைக்கே என விதியின் போக்கில் தற்போது பிரயாணித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் படித்த எனது தலையெழுத்து:
முடிவுரை:
நான் இதுவரை உங்களிடம் கூறிய விஷயங்கள் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தவை நடந்து கொண்டிருப்பவை இனி நடக்க வேண்டும் என்று நான் நினைக்கக் கூடியவை. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கடமை இருக்கிறது அந்த வகையில் விதி எழுதிய எனது தலையெழுத்தை நான் படிக்கவில்லை என்றாலும் உணர்ந்து கொண்டேன் என்ற நம்பிக்கையில் இசை துறையை கற்றுத் தேர்ந்து ஜாம்பவானாகி ஒரு அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை நான் உருவாக்குவேன். இது சத்தியம்.





ConversionConversion EmoticonEmoticon