How I Learned Piano and Mastered Music Theory


முன்னுரை:

இன்றைய நவீன உலகத்தில் ஒரு இசைக் கலைஞனுக்கு இசைக்கருவிகள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் என்னை போன்ற ஒரு பிச்சைக்காரனின் தட்டில் இருக்கும் காசு கூட சட்டைப் பையில் இல்லாமல் சுற்றும் கலைஞனுக்கு அவசியம்தான். அப்போது இன்றைய பெரும்பாலான கலைஞர்கள் அவசியமில்லை என்று கூறுகிறார்களே? ஏனெனில் அவசியம் இல்லை என்று சொல்லக்கூடிய நபர்கள் பண பலம் இருக்கக்கூடிய கலைஞர்கள், அவர்களுக்கு தேவைப்படக்கூடிய கலைஞர்களை பணம் கொடுத்து கூட்டி வர முடியும். அவர்களை எப்படி என்னோடு சேர்த்து வைத்து என் மனம் பார்த்தது என்பது எனக்கு தெரியவில்லை. அந்த வகையில் உண்மை நிலவரம் என்ன? என்பதை நாம் கடந்து செல்லும் நேரமும், காலமும், அனுபவமும் தான் புரிய வைக்கும். அப்படிதான் ஒரு இசைக் கலைஞனாக கிட்டத்தட்ட 5,6 வருடங்களுக்குப் பிறகு உணர்ந்து இருக்கிறேன். நானும் Piano கற்றுக் கொள்ளப் போகிறேன்.

கற்க கசந்தது ஏன்:

எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. இசையின் மீது முதல் முதலில் எனக்கு ஆர்வம் வந்த பிறகு, நானும் ஒரு இசைக் கலைஞனாக மாற வேண்டும் என்ற முடிவு எடுத்த பிறகு, எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் யூடியூபில் பல வீடியோக்கள் பார்த்தேன். அதில் piano கற்றுக் கொள்வது எப்படி, guitar கற்றுக் கொள்வது எப்படி, என்ற சில வீடியோக்களையும் அடங்கும். உதாரணத்திற்கு 28 வயதில் ஏ ஆர் ரகுமான் சன் டிவிக்கு பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டியில் கொடுத்திருந்தார், அதில் தான் கிட்டத்தட்ட 15 வருடமாக piano play செய்து கொண்டிருப்பதாக சொல்லியிருந்தார். அதைக் கேட்ட உடன் எனக்குத் தோன்றிய முதல் விஷயம் 22 வயதில் தான் நான் இசை துறையை ஆர்வமே வந்தது. அப்படி பார்த்தால் நான் இந்த piano ஓரளவிற்கு கற்றுக் கொள்வதற்குள் 37 to 40 வயதை தாண்டி விடுவோமோ! என்ற பயத்தில் இசைத்துறை மீது இருந்த ஆசையே கொஞ்ச நாளைக்கு காணாமல் போனது. 

இருப்பினும் விதியின் விளையாட்டு என்னமோ தெரியவில்லை Fl Studio சாஃப்ட்வேரில் இசைக்கருவிகளை வாசித்து தான் நீங்கள் பாடல் உருவாக்க முடியும் என்பது கிடையாது, படம் வரைவது போன்று பாடல்களை உருவாக்க முடியும் என்ற ஒரு அயல்நாட்டு வீடியோ பார்த்தேன். பின்பு தான் தெரியவந்தது Fl studio-வில் Automatic Chord Programming Option இருக்கிறது. அதாவது எனக்கு A Major 7th Chord வேண்டுமென்றால் அதற்கு எந்தெந்த கீ எனத் தெரியாமலே Fl studio Chord Option மூலமாக Major 7th கிளிக் செய்து விட்டு Piano Roll உள்ளே A கிக்கு எதிராக கிளிக் செய்தால் போதும், A Major 7th Chord வந்துவிடும். அல்லது 1<3<5 என்கிற ஒரு ஃபார்முலா இருக்கிறது. அதாவது ஒரு ஸ்கேலுக்குள் இந்த 1<3<5 எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு கியையும் வரைந்தால் அந்த ஸ்கேலுக்குள் வரக்கூடிய major and minor chords-களை எடுத்துக் கொள்ளலாம். மற்றும் melody play செய்துதான் Solo இன்ஸ்ட்ருமென்ட் கொண்டுவர முடியும் என்பது கிடையாது Fl studio Paino Rollலில் படம் வரைவது போன்று அந்த மெட்டை கேட்டு கேட்டு ஒவ்வொன்றாக கொண்டு வந்து விடலாம். இதை தெரிந்து கொண்ட பிறகுதான் ஏதோ ஒரு இசை கருவியை வருடக்கணக்காக நேரத்தை செலவு செய்து கற்றுக் கொண்ட பிறகு தான் ஒரு பாடலை உருவாக்க முடியும் என்பது கிடையாது என முடிவு செய்து, Fl Studio மூலமாக எனது பிரயாணத்தை ஆரம்பித்தேன். இதில் கேளிக்கை என்னவென்றால் இசைக்கருவிகளுக்கு தன் வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை கொடுத்து கற்றுக் கொள்ளும் நபர்களை பார்க்கும் போது கேலி கிண்டலாக எனக்கு தெரிந்தது. ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பது வருடங்கள் கடந்து போன பிறகு தற்போது எனக்கு புரிந்திருக்கிறது.

தற்போது நான் ஒரு பாடலை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிடுகிறது. ஆனால் இந்த ஒரு மாதத்தில் பாடலுக்கான ஐடியா கிடைக்க வெறும் சில மணி நேரங்களோ அல்லது ஓரிரு நாட்கள் தான் ஆயிருக்கும். மீதி நான் செலவு செய்யக்கூடிய அனைத்து நேரங்களும் ஒவ்வொரு இன்ஸ்ட்ருமென்ட்கான சவுண்டையும் ப்ரோக்ராம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலதாமதம் ஆகும். ஒருவேளை எனக்கு பியானோ தெரிந்திருந்தால் ஓரிரு நாட்களிலேயே ஒரு முழு பாடலுக்கான வேலை முடிந்திருக்கும். ஒரு இசைக்கருவியை கற்றுக் கொள்ள வருடக்கணக்காக ஏன் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்ற சோம்பேறித்தனத்தால் ஒவ்வொரு பாடலிலும் அந்த வருடக் கணக்காக வீணடிப்பதாக நினைக்கும் கால அளவை விட அதிகமாக நான் செலவு செய்து கொண்டிருக்கிறேன். அப்படி இருந்தும் நான் ப்ரோக்ராம் செய்யக்கூடிய அனைத்து மெட்டுக்களும் Humanize Feel ( human velocity ) இருக்காது அதாவது ஏதோ ஒரு இயந்திரம் மெட்டுக்களை போட்டு இருந்தால் எப்படி ஒரே மாதிரியான அழுத்தங்களும் சத்தத்தின் அளவுகளும் இருக்குமோ அந்த மாதிரி தான் இருந்தது. இதை நான் தெரிந்து கொள்ளவே வெகு நாட்கள் ஆகிவிட்டது. 

எப்படி தெரிந்தது என்றால் நான் தற்போது மதுரையில் உள்ள சவுண்ட் மேக்ஸ் என்ற ஸ்டுடியோவில் வேலை பார்த்து வருகிறேன். இங்கு சுதன் என்கிற music producer, பாடகர் "Mathichiyam Bala" அவர்களுக்காக Vocal REC செய்ய அவ்வப்போது வருவார். அப்போதுதான் கவனித்தேன் அவர் கை பியானோவில் மிகத் துல்லியமாக நடனம் ஆடியது. பாடகர்களுக்கு மெட்டுக்களை புரிய வைக்க அவர் பியானோவில் மெட்டை ப்ளே செய்து காட்டினார். மற்றும் Mathichiyam Bala அவர்களது பாடலுக்கு முழு இன்ஸ்ட்ருமென்டேசனையும் வெறும் பியானோவை பயன்படுத்தி ப்ரோக்ராம் மூலமாக உருவாக்குகிறார். இதெல்லாம் நேரடியாக பார்த்த பிறகு தான் பியானோ கற்றுக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குப் புரிந்தது கத்துக்கிட்டே ஆகணும்னு முடிவு பண்ணேன்.

நானும் பியானோவும்:

இருப்பினும் நான் முழு மனதோடு பியானோவை கற்றுக் கொள்ளலாம் என இறங்குவதற்கு நாட்கள் ஆனது. தற்போது நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்டுடியோவில் பெரிதாக வேலைகள் எதுவும் இல்லை. சில நாட்கள் சும்மா வந்துட்டு வீட்டுக்கு போய்கிட்டு இருக்கேன். அப்படித்தான் ஒருநாள் முடிவு எடுத்தேன் இப்படிப்பட்ட நாட்கள் மாதத்தில குறைந்தது ஒரு வாரம் இல்லாட்டி ஒன்றரை வாரம் ஆவது வருது, அந்த நாளை பயன்படுத்திக்கிட்டு பியானோ கத்துக்கலாம்.. அப்புறம் ஸ்டுடியோலையே 61 keys midi keyboard இருக்கு. அது என்ன மாயமா மந்திரமோ தெரியல இந்த கீ போர்டுல இருக்கிற கி ரொம்ப லூசா இருக்குது ரொம்ப சுலபமா அழுத்தலாம் இதுக்கு முன்னாடி டெக் பாஸ் கம்பெனில நான் வேலை பார்த்துட்டு இருக்கும்போது arturia keylab 49 keyboard வாங்கி தந்தாங்க அதோட கீ ரொம்ப டைட்டா இருந்தநாள எனக்கு கத்துக்கணும் என்ற எந்த ஒரு எண்ணமும் வரல. அந்த வகையில் இப்ப எனக்கு சாதகமான வாய்ப்பு தான் அமைஞ்சிருக்கு இத பயன்படுத்திக்கலாம் அப்படின்னு முடிவு பண்ணி இருக்கேன். இனி ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமா paino கத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

Day 1:

Piano Playing Formulas For Beginners
இன்று காலை யூடியூபில் பியானோ எப்படி கற்றுக்கொள்வது என தேடிக்கொண்டிருந்தேன், அப்போதுதான் Pianote என்கிற சேனலில் Kevin என்கிற நபர் "A Beginner's Guide To Music Theory (Everything You Need To Know) " என்ற வீடியோவில் பியானோவை பிகினராக உள்ள நபர்கள் கற்றுக் கொள்வதற்கு முன் புரிந்து கொள்வது எப்படி என்பதை தெளிவாக விளக்கியிருந்தார். அதாவது நான் எப்படி பியானோவே தெரியாமல் 1<3<5 என்ற ஃபார்முலாவை பயன்படுத்தி Chords சாப்ட்வேரில் உருவாக்கினேனோ அதேபோன்று வாசிப்பதற்கும் ஒரு பார்முலா இருக்கிறது. அது என்னவென்றால் இப்போது ஒரு மேஜர் கார்டு வேண்டுமென்றால் Root + 4 + 3 என்ற விகிதத்தில் கீகளை அழுத்த வேண்டும். அதாவது எந்த நோட்டுக்கு மேஜர் வேண்டுமோ அந்த நோட்டை Root என வைத்துக்கொண்டு அதன் பிறகு ஒன்று இரண்டு மூன்று நான்கு என எண்ணி நான்காவது கீதான் இரண்டாவதாக அழுத்த வேண்டிய கி, மீண்டும் ஒன்று இரண்டு மூன்று என எண்ணி மூன்றாவதாக வரக்கூடிய கீயையும் சேர்த்து அழுத்தினால் மேஜர் கார்டு கிடைத்துவிடும். இந்த மாதிரி மேஜர் Chord எப்படி கண்டுபிடிப்பது, மைனர் Chord எப்படி கண்டுபிடிப்பது, Diminshed, Augmented, Sus4, Sus2, Major7th, Minor 7th, மற்றும் Dominant 7th ஆகிய Chord-களுக்கு இருக்கும் பார்முலாவை பகிர்ந்திருந்தார். அதை ஒரு நோட்டில் நான் எழுதி வைத்துக் கொண்டேன். உண்மையிலேயே யூடியூபில் நான் தேடிப் பார்த்ததில்லையே சிறந்த வீடியோ என்றால் கெவின் அவர்கள் தொகுத்து வழங்கிய "A Beginner's Guide To Music Theory (Everything You Need To Know) " வீடியோ தான்.

இன்று எனக்கு ஸ்டுடியோவில் காலை 10:00 shift, என்னுடைய நல்ல நேரம் இன்று எந்த ஒரு வேலையும் ஸ்டுடியோவில் இல்லை. ஆகையால் நான் இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என முடிவு செய்து. நான் நோட் செய்து வைத்த ஃபார்முலாவை பயன்படுத்தி பியானோவில் பிலே செய்து பார்த்தேன். பொதுவாக பல வீடியோக்களின் நான் இதை கவனித்து இருக்கிறேன். C major ஸ்கேலில் பிளே செய்வது சுலபம் என்பார்கள் அதாவது இந்த ஸ்கேலில் வெறும் வெள்ளைக் Keyகள் மட்டுமே வரும். ஆகையால் நாம் இதிலிருந்து ஆரம்பிப்போம் என முடிவு செய்து கூகுளில் C Major கேளில் அடங்கக்கூடிய கார்டுகள் என்னென்ன என்பதை தேடிய போது C. Dm, Em, F, G, Am, B கார்டு தெரியவந்தது அதை எழுதி வைத்திருந்த பார்முலாவை பியானோமீது ஒவ்வொரு Keyயாக எண்ணி எண்ணி மேஜர் மைனர் கார்டு மட்டும் பிளே செய்து பார்த்தேன். 

1. இதில் எனக்குப் புரிந்தது என்னவென்றால் C major ஸ்கேலில் வரக்கூடிய அனைத்து கார்டுகளும் ஒரு கீ விட்டு ஒரு கீ என்ற விகிதத்தில் தான் விரலின் ஷேப் ப்ளே செய்ய பயன்படுத்தப்படுகிறது.

2. C major Scaleளில் மட்டுமே இவ்வளவு சுலபமாக இருக்கிறது இனி வரப் போகும் ஸ்கேல்களில் ஒவ்வொரு ஸ்கேலுக்கும் ஒரு ஒரு விதமான விரல் ஷேப் இருக்கிறது என நினைத்தேன்.

3. ஒரு ஸ்கேலுக்குள் என்னென்ன கார்டுகள் வருகிறது என்பதை மட்டும் தான் மனப்பாடம் செய்ய வேண்டும். இந்த கார்டை பிளே செய்வதற்கு என்னென்ன Keyயை அழுத்த வேண்டும் என யோசிப்பதை விட Root கீயை பார்த்து விரல் ஷேப்பை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் தானாக சரியான கீ யை பிளே செய்ய முடியும், வேகமாக கார்டை பிளே செய்ய முடியும்.

நான் ஒரே நாளில் பியானோவில் இருக்கிற அனைத்து கீகளையும் பயன்படுத்தி எல்லா கார்டுகளையும் ப்ளே செய்து பார்க்க விரும்பவில்லை. கண்டிப்பாக எனக்கு அது குழப்பிவிடும் கற்று கொண்டதையும் மறக்கடித்து விடும் என்பதால் இன்று முழுக்க முழுக்க C major ஸ்கேலில் என்னென்ன கார்டுகள் வருமோ அனைத்தையும் திருப்பித் திருப்பி ப்ளே செய்து கொண்டே இருப்போம் நாளை அடுத்ததை கற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்தேன்

கிட்டத்தட்ட காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை என்ற விகிதத்தில் மீண்டும் மீண்டும் பிளே செய்து பார்த்துக் கொண்டிருந்தேன் ஒரு கட்டத்திற்கு மேல் மனப்பாடமாக Keyகளை எண்ணாமலே விரல் தானாக பிளே செய்ய ஆரம்பித்தது. எனக்கு பொதுவாக பியானோவில் உள்ள கீகள் C, C#, D, D#, E, F, F#, G, G#, A, A#, B, வரிசை பிரகாரம் தெரியும் ஆனால் திடீரென நடுவில் ஒரு விரலை வைத்து இது என்ன கீ என்று கேட்டால் என்னால் சொல்ல முடியாது நான் முதலில் இருந்து C C# D D#... என சொல்லிக் கொண்டே பார்த்தால்தான் என்னால் சொல்ல முடியும் ஆனால் இன்று மதியத்திற்குப் பிறகு என்னால் தெளிவாக உணர முடிந்தது இந்த கீயின் பெயர் என்ன இது மனப்பாடத் தாள் வந்த ஞானம் கிடையாது திருப்பித் திருப்பி Chord ப்ளே செய்ததால் கீகள் கொஞ்சம் கொஞ்சமாக பழகி விட்டது.

ஒரு வழியாக மாலை 6 மணி ஆனது கடைசியாக ஒரு முறை பிளே செய்து வீடியோ எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.

இன்று நான் கற்றுக் கொண்ட கார்டு C, Dm, Em, F, G, Am, B.

 Day 2:

இன்று காலை ஸ்டுடியோவுக்கு போன உடனே என்னோட Bossக்கு போன் செய்து எதுவும் இன்றைக்கு வேலை இருக்கிறதா எனக் கேட்டேன், அதிர்ஷ்டவசமாக இப்போதைக்கு எந்த ஒரு வேலையும் இல்லை எனக் கூறிவிட்டார். அதனால் இன்றும் நான் பியானோ ப்ளே செய்து கற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்தேன்.

இன்று அடுத்ததாக வேறு ஒரு ஸ்கேலின் Chordடை list எடுத்து ப்ளே செய்து பழகலாம் என்று தேடிக் கொண்டிருக்கும் போது தான் ஒரு உண்மை தெரிந்தது. ஒவ்வொரு ஸ்கேலுக்கும் ஒரு ஒரு விதமான விரல் ஷேப் இருக்கிறது Major And Minor அழுத்த வேண்டிய கி மாறும் என நினைத்திருந்தேன், அது உண்மை கிடையாது. ஒரு கீயின் மேஜரை எப்படி ப்ளே செய்கிறோமோ அதே தான் இருக்கிற எல்லா ஸ்கேல்லையும் ப்ளே ஆகும். Oct மட்டும்தான் மாறும். இதேதான் மைனருக்கும் Diminshed, Augmented, Sus4, Sus2, Major7th, Minor 7th, மற்றும் Dominant எல்லாத்துக்கும். அதனால ஒவ்வொரு ஸ்கேலின் Root keyக்கு ஒரு ஒரு விதமான Shape and separate Chord group key கிடையாது. ஒருமுறை இருக்கிற எல்லா கீகளின் Major, Minor, Diminshed, Augmented, Sus4, Sus2, Major7th, Minor 7th, மற்றும் Dominant ப்ளே செய்து கற்றுக் கொண்டால் போதும் எந்த ஸ்கேல் ஆனாலும் அதில் என்னென்ன Chord வருகிறது என தெரிந்து கொண்டால் போதும் அந்தந்த Chord டை ப்ளே செய்து விடலாம் என்ற உண்மை தெரிந்தது.

நேற்று தவறுதலாக C major Scale பிளே செய்து பார்த்ததால் இருக்கிற எல்லா வெள்ளைக்கிகளின் Major And Minor தெரிந்து விட்டது. ஆகையால் இன்று நேற்று play செய்த மேஜர் மைனர் keyக்கு எதிரெதிரான மைனர் மற்றும் மேஜர் key என்ன என்பதை கற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்தேன். நேற்று போலையே ஒவ்வொரு கியையும் எண்ணி எண்ணி திருப்பி திருப்பி ப்ளே செய்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து. மதியம் வரை இதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். மீதமுள்ள Diminshed, Augmented, Sus4, Sus2, Major7th, Minor 7th, மற்றும் Dominant இப்போதே கற்றுக் கொள்ள விரும்பவில்லை முதலில் என் விரல்கள் மேஜர் மற்றும் மைனர் கார்டுகளை தெளிவாகவும் வேகமாகவும் பிளே செய்ய கற்றுக் கொண்ட பிறகே அடுத்தடுத்த கார்டுகளை மனப்பாடம் செய்யலாம் என்றும் முடிவு செய்தேன்.

இன்று நான் ஒரு விஷயத்தை கவனித்தேன், அது என்னவென்றால் பியானோவில் மேஜர் கார்டுகளை பிளே செய்யும் போது உங்கள் நடுவிரல் மட்டும் மாறி இறங்கு வரிசையில் கீழுள்ள ஒரு keyயை கிளிக் செய்தால் போதும் அதே Root major கார்டு மைனர் கார்டு ஆக மாறிவிடும். உங்களுக்கு மேஜர் கார்டு வேண்டுமா மைனர் கார்டு வேண்டுமா என்பது உங்கள் நடுவிரல் தான் முடிவு செய்கிறது.

மற்றும் நேற்று நான் ஒரு பிழையும் செய்திருக்கிறேன் C major ஸ்கேனில் என்னென்ன கார்டுகள் வருமோ அதை மட்டுமே திருப்பித் திருப்பி ப்ளே செய்து கொண்டிருந்தேன். அதில் என்னையே அறியாமல் B dim கார்டை B major என நினைத்து இருந்திருக்கிறேன். உண்மை என்னவென்றால் ஒவ்வொரு ஸ்கேலின் கார்டுகளில் ஒரு Diminshed கார்டு வரும். அது Diminshed என்று தெரியாமல் கற்றுக் கொள்ளக் கூடாது. இந்த தவறுக்கு காரணம் நேற்று நான் ஸ்கேல் மூலமாக கற்றுக் கொண்டதுதான் இன்று இருக்கிற எல்லா வெள்ளைக்கீகளையும் முடித்து விட்டோம் Major Minor எப்படி ப்ளே செய்வது என்று சுருக்கி தெளிவாக எனக்கு புரியும் வகையில் நான் என்னை வழிநடத்தியதால் என்ன தவறு செய்திருக்கிறேன் என்பது புரிய வந்தது.

என்றும் மாலை 6 மணி வரை திருப்பி திருப்பி தெரிந்து கொண்டதையே பிளே செய்து கொண்டே இருந்தேன். இறுதியாக பிளே செய்து ஒரு வீடியோ எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.

இன்று நான் கற்றுக் கொண்ட கார்டு C, Cm, D, Dm, E, Em, F, Fm, G, Gm, A, Am, B, Bm, Bdim.

Day 3:

இன்று காலை தூங்கி எழுந்தவுடன் எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. ஏனென்றால் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளை Keyயில் வரக்கூடிய எல்லா Major மற்றும் Minor Chordகளை நன்றாக கற்றுக் கொண்டேன், ஆம் இன்னும் என் கை விரல்கள் வேகமாக அந்த கார்டுகளை பிளே செய்யவில்லை என்றாலும் இரண்டு நாட்களில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்னை ஆர்வமாக்கியது. ஆகையால் இன்று கருப்பு கீகளின் அனைத்து Major, minor Chordகளை கற்றே ஆக வேண்டும், இன்று இந்த வேலை முடிந்து விட்டால் கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டிய மாதிரி தான். ஆனால் கடந்த இரண்டு நாட்களைப் போலவே ஸ்டுடியோவில் ஒரு வேலையும் இருக்கக் கூடாது என வேண்டிக் கொண்டே கிளம்பி சென்றேன். விதியின் விளையாட்டா என்று எனக்குப் புரியவில்லை இன்றும் எனக்கு ஸ்டுடியோவில் எந்த ஒரு வேலையும் இல்லை. ஆகையால் களத்தில் இறங்கினேன்.

நேற்று போலவே இன்றும் எண்ணி எண்ணி கருப்பு Keyகளின் Major Minor கார்டுகளை முதலில் கண்டுபிடித்தேன். பின்னர் அதை பிளே செய்ய ஆரம்பித்தேன். மதியம் வரை மீண்டும் மீண்டும் வெறும் கருப்புக்கிகளில் வரக்கூடிய Major Minor மட்டுமே ப்ளே செய்து கொண்டிருந்தேன். பின்னர் புதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு மீண்டும் வந்து ஒரு முறை மட்டும் கருப்புக்கின் மேஜர் மைனரை ப்ளே செய்து விட்டு இரண்டு நாட்களாக கற்றுக் கொண்ட வெள்ளை Keyயுடன் சேர்த்து பிளே செய்ய ஆரம்பித்தேன். அதாவது ஒரு முழு Octave-யும் ப்ளே செய்தேன். என்னால் நம்பவே முடியவில்லை எல்லாக் கிளிகளின் Major Minor தானாக விரலில் வந்து உட்கார்ந்தது. என்னையே அறியாமல் நான் என்ன ப்ளே செய்கிறேன் என்பது புரிந்தது. நான் மேஜர் மற்றும் மைனர் கற்றுக் கொண்டேன் என்பது தெரிந்தது. மாலை வரை தொடர்ந்து இதையே திருப்பித் திருப்பி ப்ளே செய்து கொண்டிருந்தேன்.

ஒரு வழியாக ஆறு மணி ஆனது கடைசியாக ஒரு முறை பிளே செய்து வீடியோ எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.

இன்று நான் கற்றுக் கொண்ட கார்டுகள் : C, Cm, C#, C#m, D, Dm, D#, D#m, E, Em, F, Fm, F#, F#m, G, Gm, G#, G#m, A, Am, A#, A#m, B, Bm, Bdim.


Day 5:

            கடந்த மூன்று நாட்களாக நான் என்னை Chord பிடிக்கும் அளவிற்கு தேர்ச்சி செய்து விட்டேன். ஆனால் நான் பிடிக்கும் Chords, ஒரு கையால் மட்டுமே play செய்ய முடிகிறது. அது இடது கையோ அல்லது வலது கையோ எதுவாயினும் ஒரு சமயத்தில் என்னால் ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி Chords பிலே செய்ய முடிகிறது. மற்றும் நேத்து அதாவது நான்காவது நாள் ஸ்டுடியோவில் எனக்கு ஒரு சின்ன Song Mixing வேலை தான் இருந்தது. மூன்று மணி நேரத்தில் முடித்துவிட்டு. இதன்பிறகு இன்று பியானோவில் என்ன கற்றுக் கொள்ளலாம் என யூடியூபில் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது பலரும் இடது மற்றும் வலது கை காண warm up exercises என சொல்லி பியானோவில் சில பயிற்சிகள் செய்து காண்பித்தார்கள். அந்த பயிற்சி எதற்காக செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்குள் சாயங்காலம் ஆகிவிட்டது. அதனால் தான் நாளாவது நாள் எந்த ஒரு பியானோ அனுபவமும் பகிரவில்லை. 
பயிற்சியின் முதல் கட்டமாக வலது கையில் C கீயில் கட்டை விரலால் ஆரம்பித்து, D, E ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலால் அழுத்திய பிறகு C-ல் உள்ள கட்டைவிரலை இந்த ஆள்காட்டி மற்றும் நடு விரலின் கீழிருந்து F கிக்கு கொண்டு வந்து, மொத்த விரல்களையும் இதன் பிறகு வரிசை பிரகாரம் நிறுத்தினாள் முழுமையாக விரல் அடுத்த Oct C வரை சுண்டு விரலை கொண்டு சென்று விடும். ஆனால் இது வலது கைக்கு மட்டும்தான்.

இடது கைக்கு சுண்டு விரலை C-யில் வைத்துவிட்டு, வரிசையாக D, E, F, G வரை அதாவது கட்டை விரல் Key முடியும் வரை ப்ளே செய்து. அதாவது G key கட்டை விரலால் பிளே செய்த பிறகு பின்னுள்ள நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை கட்டைவிரலின் மேலோடி A , B ப்ளே செய்யவும். பின்பு கட்டை விரலை நகர்த்தி Next Oct C key-வரை ப்ளே செய்யலாம்.

இந்தப் பயிற்சி எப்போது முடிவு பெறும் என்றால் ஒரே சமயத்தில் இடது கையின் சுண்டு விரலையும் வலது கையின் கட்டை விரலையும் C கி ஆரம்பித்து ப்ளே செய்து ஒவ்வொரு விரலாக ஒற்றுமையுடன் ஒன்றாக அடுத்தடுத்த கைகளை இரண்டு கைகளின் விரல்களும் அழுத்தி முடிப்பதும். அதை வேகமாக செய்யும் அளவிற்கு Muscle memory உருவாக்கிக் கொண்டால் மட்டுமே பியானோவில் திறன் பட இரண்டு கைகளையும் பயன்படுத்தி நாம் நினைக்கும் வகையில் Chord And melody பிளே செய்ய முடியும்.

ஆரம்பத்தில் இது எனக்கு சுலபமாக தெரிந்தது. ஆனால் இன்று முழுக்க நான் இதற்காக முயற்சி செய்தும் என்னால் இரு கைகளையும் ஒரே சமயத்தில் ஒரு சீராக C யில் ஆரம்பித்து அடுத்த Oct C வரை கொண்டு செல்ல முடியவில்லை. நான் மீண்டும் மீண்டும் இதை முயற்சி செய்து கொண்டேன் சாயங்காலம் ஆகிவிட்டது. ஒருவேளை நான் இதற்கு முன்னதாக வேறு சில பயிற்சிகளும் எடுக்க வேண்டுமோ என்ற குழப்பமும் என்னுள் உருவானது. ஏனென்றால் ஒரு நாள் முழுக்க ஆகியும் என்னால் இரு கைகளாலும் பிளே செய்ய முடியவில்லை. ஆகையால் நாளை வந்து என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் என முடிவு செய்து வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.

Day 12: 

               கடந்த சில நாட்களாக காலை 9 மணி முதல் மாலை Over Time வேலையும் ஸ்டுடியோவில் நான் பார்க்க வேண்டிய நிலைமை இருந்ததால் என்னால் பியானோ பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இன்று காலை ஸ்டுடியோவுக்கு வீட்டிலிருந்து கிளம்பி வரும்போது தான் எனக்கு ஒரு ஞாபகம் வந்தது. ஒரு சில மாதங்களுக்கு முன் Mathichiyam Bala அவர்களின் மியூசிக் ப்ரொடியூசர் சுதனிடம் ஒரு டீ பிரேக்கில் இந்த மாதிரி நான் 30K லோன் வாங்கி Midi Pad And Key வாங்க போறேன்னு பேசிட்டு இருந்தேன். அப்பதான் அவர் சொன்னாரு என்கிட்ட ஒரு புது Midi 61 key இருக்கு அதிலேயே Pad வந்துரு நீங்க வேணா என்கிட்ட இருந்து வேலைக்கு வாங்கிக்கிறீங்களா அப்படின்னு கேட்டார். ஆனா அந்த சமயத்துல அவர் ஏற்கனவே யூஸ் பண்ணாத நான் எதுக்கு வாங்கணும் அப்படின்ற எண்ணத்துல வேண்டான்னு சொல்லாமலேயே மறுத்துட்டேன். என்னோட போதாத காலம் எனக்கு studio தர சம்பளத்தை வைத்து புது Midi வாங்க முடியாது. பேசாம ஒரு 15 ஆயிரம் ரூபாய்க்கு சுதன் கிட்ட இருக்கிறேன் Midiயா கேட்டு பார்ப்போ. ஒரு வேளை இப்ப என்கிட்ட வீட்டிலேயே Midi இருந்தா தினமும் காலைல என்னால பியானோ பயிற்சி பண்ண முடியும் அப்படின்னு யோசி அவருக்கு போன் பண்ணே. அவரு விக்கிறதுக்கு ஒத்துக்கொண்டார், கிட்டத்தட்ட 24 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின அந்த மிடி 17,000 க்கு கொடுக்க முன் வந்தார் நான் 15,000 ரூபாய்க்கு கேட்டே, ஒத்துக்கிட்டாரு. ஆனா என்னால மாசம் 5000, 5000 அப்படிங்கற மாதிரி மூணு மாசத்துல நான் கொடுத்து முடிச்சிடுறே அப்படின்னு சொன்னேன். அவரும் சரி ஆனா நீங்க கொடுக்கிற அந்த பணம் முழுசா கிடைச்சுச்சுன்னா நான் கையோட இன்னொரு புது Midi வாங்கிக்குவேன் அப்படின்னு  சொன்னாரு ஆனா நான் தான் இல்ல என்கிட்ட ஒரே சமயத்துல மொத்த பணத்தையும் கொடுத்து வாங்குற அளவுக்கு பணம் இல்லை, என் சம்பளம் எவ்வளவு தான் அப்படின்னு சொல்லி அவர்கிட்ட விண்ணப்பிச்சேன். அவரும் பரவால்ல சரி நான் இப்ப வெளியூர்ல இருக்கேன் மதுரைக்கு வந்த உடனே கொண்டு வந்து கொடுக்கிறேன்னு ஒத்துக்கிட்டாரு. நானும் சரின்னு சொல்லிட்டு அன்னைக்கு ஸ்டுடியோக்கு போயி வேலைய முடிச்சுட்டு திருப்பி வீட்டுக்கு வரும்போது தான் எனக்கு தோணுச்சு 61 midi key சரிதான் ஆனால் என்ன கம்பெனி அது எப்படி இருக்கும் என்று ஆர்வத்துல அவருக்கு வாட்ஸ் அப்ல மாடல் என்னது ஆன்லைன்ல உள்ள ஏதாவது லிங்க் அனுப்புங்க அப்படின்னு சொன்னேன். அப்பதான் எனக்கு தெரிஞ்சிச்சு நான் எதிர்பார்த்த எல்லா விஷயமும் இருக்கிற "M-Audio Oxygen 61 MKV 61Key USB Midi Keyboard Controller-Black" 24 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குனதா அவர் சொன்னாரு ஆனா நான் இன்னைக்கு பார்க்கும்போது 27 ஆயிரத்து சில்லரையில இருந்துச்சு கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய்க்கான கீபோர்டு நமக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்குது என்ற சந்தோசத்துல வீட்ல இதை பத்தி பேசிட்டு சுதன் திருப்பியும் மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வரதா சொல்லி இருந்தாரு அந்த நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்து அன்னைக்கான நாள கடந்தேன்.

தொடரும்...

Previous
Next Post »